Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, January 31, 2019

8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணினி: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்



விழாவில் பேசிய பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.
அரசுப் பள்ளிகளில் 8, 9, 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் ஸ்மார்ட் மடிக்கணினி வழங்கப்படவுள்ளது என பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.



நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே உள்ள பிஜிபி பொறியியல் கல்லூரியில், பள்ளிகளுக்கிடையேயான அறிவியல் கண்காட்சி, கலைத் திறன் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள் என முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்வி நிறுவனத் தலைவர் டாக்டர் பழனி பெரியசாமி தலைமை வகித்தார்.
இவ் விழாவில் பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி ஆகியோர் பங்கேற்று அறிவியல் கண்காட்சியைத் தொடக்கி வைத்தனர்.



இதில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியது: ஆற்றலும், ஒழுக்கமும் கொண்ட சிறந்த கல்வியை மாநில அரசு அளித்து வருகிறது. ஏழை இல்லா தமிழகத்தை கல்வியால் மட்டும்தான் உருவாக்க முடியும் என்பதால்தான் ரூ.28,000 கோடி அளவுக்கு நிதியை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கீடு செய்தார். தற்போதைய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ரூ.30,000 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளனர்.



அடுத்த கட்டமாக, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இஸ்ரோவில் உள்ளது போல் அருங்காட்சியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமுடன் பணியாற்றிய விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் வழிகாட்டுதலுடன் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எதிர்காலத்தில் சிறந்த கல்வியை உருவாக்க தலா ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் வரும் மார்ச் மாத இறுதிக்குள் 621 அட்டல் டிங்கரிங் ஆய்வகங்கள் திறக்கப்படும்.
மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க எல்.கே.ஜி, யுகே.ஜி. வகுப்புகள் அரசுப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அண்மையில் நடந்த உலக தொழில்முதலீட்டாளர்கள் மாநாட்டில் மலேசிய, அமெரிக்க நிறுவனங்களோடு ரூ.2,500 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு, அறிவியல் பாடத் திட்டங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் 35,000 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெறுவர்.



வரும் ஆண்டில் தமிழகத்தில் பிளஸ் 2 பாடத்திட்டத்தில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி சேர்க்கப்பட்டு, மாணவர்கள் படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் கல்வியாக மாற்றி அமைக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் 11 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அடுத்த மாத இறுதிக்குள் மடிக்கணினி வழங்கப்படும். மேலும் 8, 9, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 13.17 லட்சம் ஸ்மார்ட் மடிக் கணினிகள் வழங்கப்படும். இதன் மூலம் மொத்தம் சுமார் 25 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி கிடைக்கும் என்ற சாதனையை எட்ட முடியும் என்றார்.
இவ் விழாவில், நாமக்கல் எம்.பி. பி.ஆர்.சுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கல்லூரித் தாளாளர் கணபதி நன்றி கூறினார்.