மாணவர்கள் நலனை கருத்தில் கொள்ள ஐகோர்ட்டு யோசனை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் ஆகுமா? இன்று முடிவு தெரியும்

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த முறை நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.இதை எதிர்த்து அவர் கடந்த 2017-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், ஆசிரியர் சங்க நிர்வாகிகள், ஜாக்டோ-ஜியோ அமைப்பு எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டு இருந்தனர். இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நிலுவையில் உள்ளது.இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று பிற்பகலில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆசிரியர் சங்கங்களின் சார்பில் வக்கீல் ஜி.சங்கரன் ஆஜரானார். அவரிடம் நீதிபதி என்.கிருபாகரன், தற்போது நடைபெற்று வரும் ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பாக கேள்வி எழுப்பினார்.




‘ஆசிரியர்களுக்கு மாணவர்களின் நலன் மீது அக்கறை இல்லையா? ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் அடுத்த தலைமுறையே பாதிக்கப்படும். தொழிலாளிகள் போல் சாலையில் இறங்கி போராடுவது ஆசிரியர்களுக்கு அழகா?, கற்பிப்பதுதான் ஆசிரியர்களின் பணியின் நோக்கம். அப்படி இருக்கும்போது பொதுதேர்வு நெருங்கும் நேரம்தான் ஆசிரியர்களின் போராட்டத்திற்கான நேரமா? பெரும்பாலான அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில்தான் படிக்கின்றனர். எனவே, பெற்றோரான அரசு பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிடும் வரை, அவர்களது குழந்தைகளுக்கு கற்பிக்கக் கூடாது என்று உத்தரவிட்டால், அவர்கள் ஏற்பார்களா?’ என்று சரமாரியாக நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், ‘தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதியம் குறைவாக கொடுக்கப்படுகிறது. ஆனால், அவர்களுக்கு அதிக வேலைப்பளு கொடுக்கப்படுகிறது என்பது அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தெரியுமா?




ஐகோர்ட்டில் ரூ.6,500 ஊதியத்துக்கு துப்புரவு பணியாளர்கள் பணிகளுக்கும், ரூ.18,000 ஊதியத்துக்கு அலுவலக உதவியாளர் பணிகளுக்கு எத்தனை பட்டதாரிகள், என்ஜினீயரிங் பட்டதாரிகள் விண்ணப்பம் செய்து போட்டியிடுகிறார்கள் தெரியுமா? டாக்டர்கள் கடமையை செய்ய தவறினால் மக்களின் நலன், சுகாதாரம் பாதிக்கப்படும். ஆனால், ஆசிரியர்கள் கடமையைச் செய்யவில்லை என்றால் அடுத்த தலை முறையே பாதிக்கப்படும். ஆசிரியர்கள் கடவுள் போன்றவர்கள்’ என்று நீதிபதி கருத்து தெரிவித்தார். பின்னர், ‘கூரியர் நிறுவனங் கள், வீடு வாசலுக்கு உணவு கொண்டுவரும் தனியார் நிறுவனங்களில் எத்தனை பட்டதாரிகள் வேலை செய்கிறார்கள் தெரியுமா?, அரசியல்வாதிகளை திட்டுகிறார்கள். ஆனால் தாங்கள் எப்படி செயல்படுகிறோம்? என்பதை ஆசிரியர்கள் உணர்ந்து பார்க்க வேண்டும்.




போராட்டத்தில் ஈடுபடும் சங்க நிர்வாகிகள் சமூக வலைத்தளங்களில் அமைச்சர்கள், ஆட்சியாளர்கள், உயர் அதிகாரிகளை சரமாரியாக வசைபாடுவது சரிதானா? தேர்வு நேரத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் மட்டும் போராட்டத்தை இந்த கல்வியாண்டு முடியும் வரை தள்ளி வைக்க முடியுமா? என்று இன்று (செவ்வாய்க் கிழமை) பிற்பகலுக்குள் தெரிவிக்க வேண்டும்’ என்று நீதிபதி கூறினார். அதற்கு வக்கீல், ‘ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கடந்த 10 ஆண்டுகளாக நடத்திவரும் தொடர் போராட்டம் இது. இவர்களது கோரிக்கையை பரிசீலிக்காமல் அரசு எந்திரம் அமைதியாக உள்ளது. மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும், மாநில அரசு ஆசிரியர்களுக்கும் ஊதியம் விகிதம் அதிக வித்தியாசம் உள்ளது. எல்லா பிரச்சினைகளையும் உடனே தீர்க்க வேண்டும் என்று கோரவில்லை. கொஞ்சம் இறங்கி வந்து அரசு பேச்சுவார்த்தை நடத்தலாம். ஆனால், அரசு பிடிவாதம் பிடிக்கிறது’ என்றார்.அதற்கு நீதிபதி, ‘மற்ற மாநிலங்களில் 2004-ம் ஆண்டுக்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியம் உள்ளதா?, பணிக்கு வரும்போது ஓய்வூதியம் இல்லை என்ற நிபந்தனையை ஏற்றுக்கொண்டுதானே பணியில் சேர்ந்தார்கள்?’ என்றார்.




பின்னர், அரசு வக்கீலைப் பார்த்து, ‘ஆசிரியர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஒவ்வொரு ஆண்டும் கிடப்பில் போடுவது ஏற்க முடியாது. அவர்களின் கோரிக்கையை அரசு கவனம் செலுத்தி உரிய தீர்வை காணவேண்டும். அதேபோல் பணியில் இருந்து ஓய்வு பெற்று 20 ஆண்டுகளாகியும் சங்க பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். பணியில் இருப்பவர்கள் சங்க நிர்வாகிகளாக இருந்தால்தான் அவர்களுக்கு ஊழியர்களின் தற்போதைய நிலை தெரியும்’ என்று நீதிபதி கூறினார். அதைத் தொடர்ந்து, ‘ஜாக்டோ-ஜியோ போராட்டம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்சிலும், ஐகோர்ட்டு மதுரை கிளை டிவிஷன் பெஞ்சிலும் வழக்குகள் நிலுவையில் உள்ளது. அந்த டிவிசன் பெஞ்ச் அதிகாரத்தில் தனி நீதிபதியான நான் தலையிட முடியாது. உத்தரவு பிறப்பிக்க முடியாது. அதேநேரம், மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் மட்டும் பணிக்கு திரும்ப முடியுமா? என்பதை ஆசிரியர்கள் சங்கங்கள் தரப்பிலும், ஆசிரியர்கள் மட்டும் பணிக்கு திரும்ப அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்து அரசுத் தரப்பும் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவிக்க வேண்டும். இந்த வழக்கு இன்று பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்’ என்று உத்தரவிட்டார்.




கோர்ட்டு உத்தரவு காரணமாக ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் ஆகுமா என்பது இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை தெரியவரும்.
Share:

Categories