Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, February 26, 2019

பொதுதேர்வுகள் மார்ச் 1ல் தொடக்கம் விடைத்தாளில் அனைத்து விடைகளையும் தேர்வரே அடிப்பது ஒழுங்கீன செயல் மாணவர்களுக்கு அறிவுரை வழங்க உத்தரவு


பிப்.26: பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மார்ச் 1ம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில் அறைக் கண்காணிப்பாளர்களால் தேர்வர்களுக்கு வழங்கப்பட வேண்டிய முக்கிய அறிவிப்புகள் தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் விளக்கம் அளித்துள்ளது.


அதில் கூறியிருப்பதாவது:
தேர்வு துவங்குவதற்கு முன்பு அன்றைய தேர்வுக்குரிய முதன்மை விடைத்தாளின் பக்க எண்ணிக்கையை தேர்வர்களுக்கு அறிவித்து, தேர்வர்கள் தமக்கு வழங்கப்பட்டுள்ள விடைத்தாளில் பக்கங்களின் எண்ணிக்கையை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
தேர்வர்கள் தமது முகப்பு சீட்டிலுள்ள புகைப்படம், பெயர், பாடம், பயிற்று மொழி ஆகிய விவரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். தேர்வர்கள் தங்களது மேஜை மற்றும் நாற்காலிக்கு அடியில் எவ்விதமான துண்டுச்சீட்டுகளும் இல்லை என்பதை தேர்வு தொடங்கும் முன்பே உறுதி செய்து கொள்ள வேண்டும். தேர்வர்கள் விடைத்தாளின் எந்தவொரு பகுதியிலும் தமது தேர்வெண்ணையோ அல்லது பெயரையோ கண்டிப்பாக எழுதக்கூடாது.



தேர்வர்கள் தேர்வு எழுதும்போது பயிற்சி செய்வதற்கு விடைத்தாளின் அடிப்பகுதியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கூடுதல் விடைத்தாள் வேண்டுமெனில் கடைசி 2 பக்கங்கள் எழுதும் முன்னரே கூடுதல் விடைத்தாளின் தேவையை அறைக்கண்காணிப்பாளரிடம் தெரிவிக்க வேண்டும்.
தேர்வர்கள் ஒருசில விடைகளை கோடிட்டு அடிக்கும் நிகழ்வுகளில், மேற்படி விடை என்னால் அடிக்கப்பட்டது என்ற குறிப்புரையை பேனாவினால் எழுதுமாறு அறிவுறுத்துதல் வேண்டும். ஆனால் அறை கண்காணிப்பாளரின் கையொப்பம் இடக்கூடாது.


மேலும் தேர்வரது அருகே பதிவெண்ணோ, பெயரோ எழுதக்கூடாது. விடைத்தாளில் தாம் எழுதிய அனைத்து விடைகளையும் முழுவதுமாக தேர்வர் தாமே அடிப்பது ஒழுங்கீன செயல் என கருதப்படும். அவரது தேர்வு முடிவு நிறுத்தம் செய்யப்படுவதுடன் அடுத்து வரும் இரு பருவங்களுக்கு தேர்வினை எழுத அனுமதிக்க இயலாது என தேர்வு துறை தெளிவுபடுத்தியுள்ளது. எனவே தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தாம் எழுதிய விடைகளை தாமே அடிப்பதை தவிர்க்க வேண்டும்.


தேர்வர்கள் நேரத்தை மட்டும் காட்டும் சாதாரண கைக்கடிகாரத்தை அணிந்து வர அனுமதிக்கலாம். தேர்வுக்கு வராத மாணவரின் இருக்கையில் வேறு மாணவர் அமர்ந்து தேர்வெழுத அனுமதிக்கக்கூடாது.