Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, February 1, 2019

5, 8 வகுப்புகளுக்கு கட்டாயத் தேர்ச்சி: சட்டத் திருத்தம் மத்திய அரசிதழில் வெளியீடு


ஐந்து, எட்டாம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி நடைமுறைக்கான சட்டத் திருத்தம் மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இலவச மற்றும் கட்டாயக் கல்வித் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கும் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்து அதற்கான சட்டத் திருத்தத்தை அண்மையில் கொண்டுவந்தது. இந்த திருத்தச் சட்டம் இப்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.



தற்போது, 1 முதல் 8-ம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களையும் கட்டாயத் தேர்ச்சி செய்யும் முறை அமலில் உள்ளது. இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகவும், 5 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்றும் மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாகக் கூறிவந்தது. இது குறித்த அறிவிப்பையும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்திருந்தார். இருப்பினும், இந்த நடைமுறையால் கிராமப்புற மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்றும், பெரும்பாலான குழந்தைகள் கல்வியைப் பாதியிலேயே நிறுத்த வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் கருத்துத் தெரிவித்திருந்தன.



அதே நேரத்தில் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை நடைமுறையில் கொண்டுள்ள தமிழகம், இந்த புதிய மாற்றத்தை மேற்கொள்ளக்கூடாது எனவும், 8-ஆம் வகுப்பு வரையில் இலவசக் கல்வி அளிக்க வேண்டும் எனவும் கூறிவந்தது. இருப்பினும், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், 8-ஆம் வகுப்பு வரை கட்டாயமாக தேர்ச்சி பெறச் செய்வதினால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படுகிறது. அதனால், 8 ஆம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு கட்டாயம் வைக்க வேண்டும் என தொடர்ந்து கூறிவந்தார். இந்நிலையில், கடந்த 11-ஆம் தேதியிட்ட மத்திய அரசின் அரசிதழில் இத்தகவல் வெளியாகியுள்ளது.



அதில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு ஆண்டின் இறுதியில் கட்டாயத் தேர்வு நடத்தப்பட வேண்டும். இதில் தோல்வியடையும் மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கும் வகையில், தேர்வு முடிவு வெளியான இரண்டு மாதங்களில் உடனடித் தேர்வு நடத்தவேண்டும்.
அதிலும் மாணவர் தோல்வியடைந்தால் அவர்களை அடுத்த வகுப்புக்கு அனுமதிக்காமல், 5 அல்லது 8-ஆம் வகுப்பிலேயே மீண்டும் தொடர அனுமதிக்கவேண்டும்.
அதே நேரம், ஒரு மாணவர் தொடக்கக் கல்வியை முடிக்கும் வரை, எந்தக் காரணம் கொண்டும் அவரை பள்ளியைவிட்டு வெளியில் அனுப்பக் கூடாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது