Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, February 1, 2019

ஆசிரியருக்குப் பாத பூஜை



ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற குரு வந்தனம் நிகழ்ச்சியில் ஆசிரியர்களுக்கு பாதபூஜை செய்யும் மாணவர்கள்.



சென்னையில் நடைபெற்று வரும் ஹிந்து ஆன்மிக, சேவைக் கண்காட்சியில் பெற்றோர், ஆசிரியர், விருந்தினரைப் போற்றுவதை வலியுறுத்தும் "மாத்ரு, பித்ரு, ஆச்சார்ய, அதிதி' வந்தனம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பெற்றோர், ஆசிரியர்களுக்குப் பாத பூஜை செய்தனர்.
சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் ஹிந்து ஆன்மிகம், சேவை அறக்கட்டளை, பண்புப் பயிற்சி அறக்கட்டளை சார்பில் ஹிந்து ஆன்மிக, சேவைக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. வனம், வன விலங்குகளைப் பாதுகாத்தல், ஜீவராசிகளைப் பேணுதல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், பெற்றோர், பெரியோர், ஆசிரியர்களை வணங்குதல், பெண்மையைப் போற்றுதல், நாட்டுப்பற்றை வளர்த்தல் ஆகிய 6 கருத்துகளை மையமாக வைத்து பிப்ரவரி 4 ஆம் தேதி வரை இக் கண்காட்சி நடைபெறுகிறது.



இதில், பெற்றோர், ஆசிரியர், விருந்தினரை வணங்குவதை வலியுறுத்தும் "மாத்ரு, பித்ரு, ஆச்சார்ய, அதிதி' வந்தனம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெற்றோர், ஆசிரியர்களுக்கு குழந்தைகள் பாத பூஜை செய்தனர். இதையடுத்து, பெற்றோர், ஆசிரியர்களுக்கு புதிய ஆடைகள் வழங்கப்பட்டன. பள்ளி மாணவர்களின் மாறுவேடப் போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, பாட்டுப் போட்டி, நாட்டிய நாடக நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன.

அரங்கில் இடம்பெற்ற மூலிகை செடிகள்.



இந்த நிகழ்ச்சியில், பம்மல் சங்கரா கல்விக் குழுமம், ஆதம்பாக்கம் டிஏவி பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இதைத் தொடர்ந்து, பஞ்சாப், கர்நாடக மாநிலங்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், அந்த மாநிலங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்துகொண்டனர்.
ஜீயர்கள் பங்கேற்பு: இந்தக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள வைணவ அரங்குகளை ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜ ஜீயர், திருக்கோவிலூர் எம்பெருமானார் ஜீயர் உள்ளிட்ட 8 ஜீயர்கள் பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஆசி வழங்கினர்.
ஆன்மிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர்