Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, February 28, 2019

தேர்தல் பணிக்கு கிராம அலுவலர்கள், கூட்டுறவு பணியாளர்களை பயன்படுத்த திட்டம் : தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி


தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை நடத்த ரூ.414 கோடி செலவாகும்’ என்றும், தேர்தல் பணியில் கிராம அலுவலர்கள், கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும், தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்
சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு, சத்ய பிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-



கடந்த 26-ந்தேதியன்று நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அனைத்துத் துறை செயலாளர்களையும் அழைத்து ஆலோசனை நடத்தினேன். தமிழகத்தில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக ரூ.414 கோடி செலவாகும் என்றும் அதை அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருக்கிறோம்.
ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் கழிவறை, குடிநீர் வசதி, சாய்தளம், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை செய்ய தயாராக இருக்கும்படி அறிவுறுத்தி இருக்கிறேன்.



தேர்தலை முன்னிட்டு அரசு துறைகளில் உள்ள, அதிகாரிகள், அலுவலர்களை பணியிட மாற்றம் செய்வது தொடர்பான நடவடிக்கை இன்னும் முடியவில்லை. காவல்துறையில் பணியிடமாற்ற நடவடிக்கைகள் 100 சதவீதம் நிறைவடைந்துவிட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பதவியில் இருந்து உயர் பதவியில் இருப்பவர்கள் வரை மாற்றப்பட்டுள்ளனர்.

வருவாய்த் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையில் அலுவலர்களை பணியிடமாற்றம் செய்வதில் சில விளக்கங்களை கேட்டிருந்தனர். அதை தெளிவுபடுத்தி இருக்கிறோம். எனவே பணியிடமாற்ற நடவடிக்கைகள் விரைவில் நிறைவு பெற்றுவிடும். தேர்தலின்போது போலீசாருடன் என்.சி.சி., என்.எஸ்.எஸ். படையில் உள்ளவர்களையும் பணியில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளோம்.



தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். அதன் பிறகு மக்கள் நலத்திட்டங்களுக்கான டெண்டர்களை வெளியிடக்கூடாது. புதிய திட்டங்களை தொடங்க வேண்டுமானால் இந்திய தேர்தல் கமிஷனின் அனுமதியைப் பெற வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பாக ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் (கலெக்டர்) காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை வழங்கி வருகிறேன். தேர்தலின் போது வாக்குச்சாவடிகளின் தயார் நிலை பற்றி அதில் ஆலோசிக்கப்படுகிறது.



தமிழகத்தை பொறுத்தவரை சட்டம்-ஒழுங்கு பிரச்சினை எதுவும் இல்லை. ஆனாலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எவை என கண்டறிந்துள்ளோம். அந்தப் பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரிகளும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டும் அளித்துள்ளனர்.

வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு இந்தப் பட்டியலில் மாற்றங்கள் இருக்கும். இந்தத் தேர்தலில் பாதுகாப்புப் பணிக்காக 200 கம்பெனி துணை ராணுவம், சி.ஆர்.பி.எப். படைகளை அழைக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம்.



தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் பணிக்கு அழைக்கப்பட்டு வராமல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். உடல்நலக்குறை ஏற்பட்டால் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரியின் அனுமதிபெற்று விடுப்பு எடுத்துக்கொள்ளலாம்

ஆசிரியர்கள் குறைவாக இருக்கும் பகுதிகளில் கிராம நிர்வாக அதிகாரிகள், கூட்டுறவு வங்கி அலுவலர்கள் தேவைப்பட்டால் பணியில் அமர்த்தப்படுவார்கள்.



தற்போது இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் வரும் சூழல் ஏற்பட்டுள்ளதாக பேச்சு எழுந்துள்ளது. இதை தேர்தலுடன் தொடர்புபடுத்தி நான் கருத்து கூற முடியாது.

இந்திய தலைமைத் தேர்தல் கமிஷனர் வெவ்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் தமிழகத்துக்கு வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.