
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் விலகலால் மாணவர் சேர்க்கைக்குப் பாதிப்பு ஏற்படாது என்று மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் அவர் கூறியது: தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு, முந்தைய காலங்களில் மொத்தமாக சென்னை அண்ணா பல்கலையில் நடைபெற்று வந்தது. மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் சிரமம் ஏற்படுத்தும் வகையில் இருந்த, இந்த நடைமுறையை எளிதாக்கும் வகையில் கடந்த கல்வியாண்டு முதல் இணையதளம் வழியில் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக, தமிழகம் முழுக்க 42 சேவை மையங்களை அரசு உருவாக்கியது. இதன்மூலம் அந்தந்த மாவட்டங்களிலேயே சேர்க்கை வசதி ஏற்படுத்தப்பட்டது. இதற்காக, 2017-ஆம் ஆண்டில் 14 உறுப்பினர்களைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது. இக் குழுவின் தலைவராக அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமிக்கப்பட்டார்.
இக் குழுவில் தொழில்நுட்பக் கல்லூரி அதிகாரிகளையும், பொறியியல் கல்லூரி முதல்வர்களையும் சேர்க்க வேண்டும் என்பதற்காக மேலும் 4 பேர் சேர்க்கப்பட்டனர். இந்த 4 பேர் சேர்க்கப்பட்ட பின்னரும் கூட அண்ணா பல்கலை துணைவேந்தர்தான் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக செயல்பட்டார்.
துணைவேந்தருடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக தொழில்நுட்பக் கல்வி இயக்கக ஆணையரை இக் குழுவின் இணைத் தலைவராக அரசு நியமித்தது. சென்னையில் மட்டுமே நடந்த சேர்க்கை கலந்தாய்வு, தமிழகத்தில் 42 மையங்களில் செயல்படுத்தப்பட்ட நிலையில், அப் பணிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதற்காக தொழில்நுட்பக் கல்வி இயக்கக ஆணையர் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
2018-இல் இணைத் தலைவர் நியமிக்கப்பட்ட நிலையில், என்ன காரணத்துக்காக தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணா பல்கலை துணைவேந்தர் விலகினார் எனத் தெரியவில்லை. அவரை அரசு நீக்கவில்லை. அவர் வகித்த தலைவர் பதவி எந்த விதத்திலும் மாற்றி அமைக்கப்படவும் இல்லை. தலைவருக்கு கூடுதல் பலம் சேர்க்கவே இணை தலைவர் மற்றும் 2 அரசு பொறியியல் கல்லூரி முதல்வர்கள் இக்குழுவில் சேர்க்கப்பட்டனர். அவர் விலகியதால், வரும் காலங்களில் மாணவர் சேர்க்கை எந்த வகையிலும் பாதிப்பு அடையாது என்றார்.


