Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, March 15, 2019

10, 12-ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி இல்லை


மகாராஷ்டிர மாநிலத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு ஆசிரியர்கள் மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அந்த வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறுவதை முன்னிட்டு மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 48 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 28-ஆம் தேதி வரை 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.


அதே நேரத்தில் அங்கு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகளுக்கும் மாணவர்கள் முழுவீச்சில் தயாராவார்கள். எனவே, இந்த விஷயத்தை மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சிக்ஷா பாரதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, பல்வேறு துறையினருடன் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் கலந்துரையாடியது.இதையடுத்து, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு ஆசிரியர்களைத் தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டது.

இது தொடர்பாக மாநில துணைத் தலைமை தேர்தல் அதிகாரி ஏ.என்.வால்வி செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அந்த வகுப்புகளுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


அதே நேரத்தில் பிற வகுப்புகளுக்கான ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி ஒதுக்கப்படும் என்றார். ஆசிரியர்கள் பொதுவாக தேர்தல் பணி, மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் பேரிடர் கால கணக்கெடுப்பு போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்