JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

அஞ்சல் துறை சார்பில், பள்ளி மாணவிகள் 1,000 பேருக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் சேமிப்புக் கணக்குத் தொடங்கப்பட்டது.
சென்னை நகர மத்திய கோட்ட அஞ்சல் துறை சார்பில், பள்ளி மாணவிகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ், அஞ்சலக சேமிப்புக் கணக்குத் தொடங்கும் முகாம், தி.நகரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் நடைபெற்றது.
விழாவுக்கு சென்னை நகர மத்திய கோட்ட அஞ்சல் துறை முதுநிலை கண்காணிப்பாளர் அலோக் ஓஜா தலைமை வகித்தார்.தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ஜெயவர்த்தன், தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் பி.சத்யா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். விழாவில், ஜெயவர்த்தன் தனது சொந்தப் பணத்தில் இருந்துபள்ளி மாணவிகள் 1,000 பேருக்கு செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் தொடங்கிக் கொடுத்தார்.
விழாவில் பேசிய அலோக் ஓஜா, “ஜெயவர்த்தன் தனது சொந்தப் பணத்தில் இருந்து பள்ளி மாணவிகளுக்கு செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் சேமிப்புக் கணக்குத் தொடங்கிக் கொடுத்ததற்கு நன்றி. செல்வமகள் சேமிப்புத் திட்டம் தங்களது பெண் குழந்தைகளுக்கு வளமான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், தங்களுடைய குழந்தையின் கல்வி மற்றும் வளர்ச்சிக்கு பெற்றோர்கள் ஆற்றும் பங்களிப்பு பாராட்டுக்குரியது” என்றார்.விழாவில், தி.நகர் தலைமை அஞ்சலக முதுநிலை அஞ்சல் அலுவலர் ஜி.கே.பொன்னுரங்கம், பள்ளி தலைமையாசிரியை மல்லிகா மந்திரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.