Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, March 13, 2019

பிளஸ் 1 கணித வினாத்தாள் மிகவும் கடினம்: தேர்ச்சி சதவீதம் குறைய வாய்ப்பு


பிளஸ் 1 பொதுத் தேர்வில் கணித வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக கணிதப் பாடத்தில் தேர்ச்சி சதவீதம் குறைய வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.


பிளஸ் 1 மாணவர்களுக்குப் புதிய பாடத் திட்டத்தின்கீழ், தற்போது பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. தமிழ், ஆங்கிலப் பாடத்துக்கான தேர்வுகள் முடிவடைந்த நிலையில், கணிதப் பாடத்துக்கான தேர்வு செவ்வாய்க்கிழமை (மார்ச் 12) நடைபெற்றது.
இதில், காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாத்தாள் வடிவமைப்புக்கு மாறாக பொதுத் தேர்வின் வினாத்தாள் இருந்ததாலும், வினாக்கள் பாடத்தின் உள்ளிருந்து கேட்கப்பட்டதாலும் கணிதத் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் வினாத்தாள் வடிவமைப்பைக் கண்டு குழப்பமடையக் கூடாது என்பதற்காகவே காலாண்டு, அரையாண்டு வினாத்தாளின் மாதிரியில் பொதுத் தேர்வு வினாத்தாள் வடிவமைக்கப்படுகின்றன. ஆனால், கணிதத் தேர்வில் வினாத்தாள் வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் வசுந்தராதேவி கூறியதாவது: காலாண்டு, அரையாண்டுத் தேர்வுக்கான வினாத்தாள்களை தேர்வுத் துறை வடிவமைக்கவில்லை. மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள்தான் வடிவமைத்தனர் என்றார்.


தேர்ச்சி சதவீதம் குறைய வாய்ப்பு: இதுகுறித்து ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கணித ஆசிரியை எம்.விஜயபானு கூறியதாவது: இந்தக் வினாத்தாளில் ஒன்று, இரண்டு, மூன்று மதிப்பெண்களுக்கான வினாக்கள் கணிதப் பாடத்தின் உள்பகுதியில் இருந்து கேட்கப்பட்டுள்ளன. காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் வராத கேள்விகளே அதிகம் கேட்கப்பட்டிருந்தன. மாணவர்கள் அதிகம் எதிர்பார்த்த கேள்விகள் கேட்கப்படவில்லை. இதனால், 100 மதிப்பெண்கள் பெறுவதும், தேர்ச்சி சதவீதமும் குறைய வாய்ப்புள்ளது என்றார்.