Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, March 13, 2019

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடக்கம்: தமிழ்நாடு, புதுச்சேரியில் 9.97 லட்சம் பேர் எழுதுகின்றனர்



தமிழ்நாடு, புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வியாழக்கிழமை (மார்ச் 14) தொடங்கி மார்ச் 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 9, 59, 618 மாணவர்களும், 38,176 தனித் தேர்வர்கள் என மொத்தம் 9,97,794 பேர் தேர்வு எழுதவுள்ளனர்.


இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பத்தாம் வகுப்பு மொழிப் பாடத் தேர்வுகளான தமிழ் முதல் தாள் மார்ச் 14-ஆம் தேதியும், தமிழ் இரண்டாம் தாள் மார்ச் 18 தேதியும், ஆங்கிலம் முதல் தாள் மார்ச் 20-ஆம் தேதியும், ஆங்கிலம் இரண்டாம் தாள் மார்ச் 22-ஆம் தேதியும் பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி மாலை 4.45 மணி வரை நடைபெற உள்ளது.

விருப்ப மொழி பாடத்துக்கான தேர்வு மார்ச் 23-ஆம் தேதியும், கணிதத் தேர்வு மார்ச் 25-ஆம் தேதியும், அறிவியல் தேர்வு மார்ச் 27-ஆம் தேதியும், சமூக அறிவியல் தேர்வு மார்ச் 29-ஆம் தேதியும் காலை 10 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 12.45 வரை நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தம் 12,546 பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள 3,731 மையங்களில் 4,76,318 மாணவிகளும், 4,83,300 மாணவர்களும், தனித் தேர்வர்களில் 12,395 பெண்களும், 25,777 ஆண்களும் 4 திருநங்கைகளும் என மொத்தம் 9,97,794 பேர் எழுதுகின்றனர்.

மேலும், வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி, புழல் ஆகிய சிறைகளிலுள்ள 152 சிறைவாசிகள் இந்தத் தேர்வை எழுகின்றனர். 49,000 ஆசிரியர்கள் அறைக் கண்காணிப்பாளர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாற்றுத் திறன் மாணவர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 5,500 எண்ணிக்கையிலான பறக்கும் படை, நிலையான படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


தேர்வுக் கட்டுப்பாட்டு அறை: மாணவர்கள் தேர்வு குறித்து தங்களது புகார்களைத் தெரிவிக்கும் வகையில் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை 93854 94105, 93854 94115, 93854 94120, 93854 94125 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.