Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, March 2, 2019

ரூ.2,000 ஊக்கத்தொகை: கணக்கெடுப்பு பணி நிறைவடையாததால் சிக்கல் :அனைத்து தரப்பினரும் விண்ணப்பம்


தமிழக அரசின், 2,000 ரூபாய் ஊக்கத்தொகை, தங்களுக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், அனைத்து தரப்பினரும் விண்ணப்பித்து வருகின்றனர். 'தமிழகத்தில், வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும், தொழிலாளர் குடும்பங்களுக்கு, தலா, 2,000 ரூபாய் வழங்கப்படும்' என, முதல்வர், இ.பி.எஸ்., சட்டசபையில் அறிவித்தார். இதனடிப்படையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்போரின், வங்கிக்கணக்கு உள்ளிட்ட விபரங்களை சேகரித்து அனுப்ப, உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.



வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோர் கணக்கெடுக்கப்பட்டு, அவர்கள் குடும்பத்தினரிடம், ஆதார் எண், வங்கிக்கணக்கு எண் ஆகியவற்றை, உள்ளாட்சி அமைப்புகள், விண்ணப்பம் வழியே பெற்றன. வறுமைக் கோட் டிற்கு கீழ் உள்ளவர்களை முடிவு செய்வதில், பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன. 'வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில், தங்கள் பெயர் விடுபட்டுள்ளது' என, ஏராளமானோர் புகார் அளித்தனர். பல இடங்களில், மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதைத் தொடர்ந்து, அனைத்து தரப்பினரும் தரும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளும்படி, அதிகாரிகள் உத்தரவிட்டனர்.



நிதியுதவி பெற, ஆண்டு வருமானம், 72 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும் என்பதால், அதிக வருமானம் பெறுவோரும், தங்கள் வருமானத்தை குறைத்து காண்பித்து வருகின்றனர். விண்ணப்ப படிவத்தில், குடும்பத் தலைவர் விபரம், குடும்பத்தினர் விபரம், அசையும், அசையா சொத்துகள் விபரம் கேட்கப்பட்டு உள்ளது.தேர்தல் அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாகலாம் என்பதால், வரும், 4ம் தேதி, நிதியுதவி வழங்கும் பணியை துவக்க, தமிழக அரசு முடிவு செய்து உள்ளது.


கணக்கெடுப்பு பணி நிறைவடையாததால், எத்தனை பேருக்கு நிதியுதவி வழங்கப்படும் என்பது, இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. தேர்தல் நேரம் என்பதால், அனைத்து தரப்பினரும், தங்களுக்கு நிதியுதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.