Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, March 6, 2019

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 இயற்பியல் தேர்வு கடின வினாத்தாளால் தேர்ச்சிக்கே சிக்கல்


சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில், இயற்பியல் பாடத்திற்கான வினாத்தாள் கடினமாக இருந்ததால், மாணவர்கள் பதில் அளிக்க திணறினர். 'தேர்ச்சிக்காவது மதிப்பெண் வழங்க வேண்டும்' என, பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில்,பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நடந்து வருகிறது.

இயற்பியல் தேர்வு நேற்று நடத்தப்பட்டது. இதில், 15 பக்கங்கள் உடைய வினாத்தாள் வழங்கப்பட்டது. மொத்தம், 70 மதிப்பெண்களுக்கு, 27 கேள்விகள் இடம் பெற்றன.
தேர்வெழுத மூன்று மணி நேரம் வழங்கப்பட்ட நிலையில், பெரும்பாலான மாணவர்களுக்கு நேரம் போதாததால், அனைத்து கேள்விகளுக்கும் பதில் எழுத முடியவில்லை. மாணவர்களுக்கு, 30 நிமிடங்கள் முதல், ஒரு மணி நேரம் வரை கூடுதலாக தேவைப்பட்டது. ஆனால், சரியான நேரத்தில் விடைத்தாள் சேகரிக்கப்பட்டு, மாணவர்கள் தேர்வு மையங்களில் இருந்து, அனுப்பப்பட்டனர்.


தேர்வு மையங்களில் இருந்து வெளியே வந்த மாணவர்கள் கூறுகையில், 'வினாக்கள், மிக கடினமாகவும், அதிக கணிதம் உடையதாகவும் இருந்ததால், பதில் அளிக்க நேரம் போதவில்லை' என்றனர்.
இதுகுறித்து, பல்வேறு தரப்பு மாணவ, மாணவியர் கூறியதாவது:மாதிரி வினாத்தாளுக்கும், தேர்வில் வந்த வினாத்தாளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதுவரை, ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு இயற்பியல் தேர்வில் கடினமாக கேள்விகள் இடம் பெற்றிருந்தன.


குறிப்பாக, 'டி' பிரிவு வினாக்கள், அதிக சிக்கலானதாக இருந்தன.சென்னை மண்டலத்தில் உள்ள தமிழகம், மஹாராஷ்டிரா, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு, இந்த வினாத்தாள் வந்துள்ளது. டில்லியில், சில பள்ளிகளுக்கு, எளிதான, 'சி' பிரிவு வினாத்தாள்கள் வழங்கப்பட்டு உள்ளன.இந்த தேர்வு, 'நீட்' மற்றும், ஜே.இ.இ., நுழைவு தேர்வுகளை விட, கடினமானதாக தெரிகிறது.


எனவே, மாணவர்களுக்கு, குறைந்த பட்சம் தேர்ச்சி மதிப்பெண்ணாவது வழங்க வேண்டும். இதுபோன்ற கடினமான வினாத்தாள்கள், இனி வழங்க வேண்டாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.இதற்கிடையே, இயற்பியல் தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்ததால், மதிப்பெண்ணை சமப்படுத்தும், 'மாடரேட்' குழுவினர், இயற்பியல் பாடத்துக்கு, மாடரேஷன் மதிப்பெண் ஒதுக்க வேண்டும் என, பெற்றோர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது