Subscribe Us

Saturday, April 20, 2019

பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்றவர்களை விளம்பரப்படுத்தத் தடை

பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றுள்ள மாணவர்களின் புகைப்படத்தை வெளியிட்டு விளம்பரம் செய்யும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை எச்சரித்துள்ளது.


இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி. ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
பள்ளிக் கல்வித் துறையின் உயர்நிலைக் குழு வழங்கிய ஆலோசனை அடிப்படையிலும், பொதுமக்களிடமிருந்து அவ்வப்போது அரசுக்கு கொண்டு வரப்பட்ட புகார்கள் அடிப்படையிலும், மாணவர்களுக்கு ஏற்படும் அதீத மன அழுத்தங்களைக் குறைக்கும் வகையிலும் ஆரோக்கியமற்ற போட்டி சூழல்களை தவிர்ப்பதற்காகவும் பொதுத் தேர்வுகளில் மாநில, மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை அறிவிக்கும் நடைமுறையை கைவிட கடந்த 2017-ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.


இந்த அரசாணையின் நோக்கத்துக்கு மாறுபட்ட வகையில் ஒரு சில மாணவர்களின் பெயர் மற்றும் புகைப்படம் கொண்ட விளம்பர பிரசுரங்களை வெளியிடுதல், பதாகைகளை அமைத்தல், நாளிதழ் மற்றும் ஊடகங்களில் விளம்பரப்படுத்துதல் போன்ற செயல்பாடுகளை மாணவர்களின் நலன் கருதி தவிர்க்குமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. அரசாணையின்படி செயல்படாத பள்ளிகள் மீது முதன்மைக் கல்வி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.