மருத்துவ மேல்படிப்பு மாணவர் சேர்க்கை: அவகாசம் நாளை வரை நீட்டிப்பு

நாடு முழுவதும் மருத்துவ மேல்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அவகாசத்தை வரும் 31-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக, இந்த மாணவர் சேர்க்கை கடந்த 18-ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
2019-20 கல்வியாண்டுக்கான மருத்துவ மேல்படிப்பில் காலியாக உள்ள இடங்களை நிரப்பும் பொருட்டு மத்திய அரசு இந்த அவகாச நீட்டிப்பு வழங்கியுள்ளது. எனினும், கல்லூரிகளில் ஏற்கெனவே இடஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் அதிலிருந்து விலகி, மீண்டும் இந்த மாணவர் சேர்க்கையில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள பொது அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பல்வேறு மாநிலங்கள், பல்கலைக்கழகங்கள், மாணவர்களிடம் இருந்து வந்த கோரிக்கைகளின் அடிப்படையில், மருத்துவ மேல்படிப்புக்குறிய மாணவர் சேர்க்கைக்கான அவகாசத்தை மே 18-ஆம் தேதியிலிருந்து, மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்தந்த மாநில அரசுகளில் நியமிக்கப்பட்டுள்ள பொது கலந்தாய்வு அதிகாரிகள், அகில இந்திய தகுதிப் பட்டியலின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளலாம்.


காலியாக உள்ள இடங்களுக்காக நடைபெறும் இந்த மாணவர் சேர்க்கையில், ஏற்கெனவே கல்லூரிகளில் இடஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் அந்த இடங்களை ரத்து செய்துவிட்டு கலந்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, மருத்துவ மேல்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்குறிய அவகாசத்தை நீட்டிக்குமாறு இந்திய மருத்துவ கவுன்சில் வாரிய உறுப்பினர்களை மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த செவ்வாய்க்கிழமை கேட்டுக்கொண்டிருந்தது.


அதேபோல், மருத்துவ கவுன்சிலுடனான கலந்தாலோசனையின் பேரில், மருத்துவ மேல்படிப்புக்கான நீட் தேர்வில் தகுதி பெறுவதற்கான மதிப்பெண்களில் 6 சதவீதத்தை சுகாதார அமைச்சகம் சமீபத்தில் குறைத்தது குறிப்பிடத்தக்கது. மாணவர் சேர்க்கைக்கான 2-ஆவது சுற்று கலந்தாய்வு நிறைவடைந்த பிறகும் சுமார் 2,000 இடங்கள் காலியாக இருந்ததை அடுத்து இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Share:

Categories