போலி - எழுத்துப்போலி
மக்களின் பேச்சு வழக்கிலும் புலவர்களின் பாடல் வழக்கிலும் ‘ஒரு சொல்லில் உள்ள எழுத்துக்களில் ஓர் எழுத்திற்குப் பதிலாக வேறொரு எழுத்து வந்து அதே போருள் தருவது போலி எனப்படும். இதனை எழுத்துப்போலி என்றும் கூறுவர். உதாரணமாக, சமயம் என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம்.
இச்சொல் பேச்சு வழக்கில் சமையம் என வழங்கப்படுவதுண்டு.
சமயம், சமையம் என்ற இரண்டு சொற்களும் நடைமுறையில் உள்ளன. ஆயினும் இவற்றில் ஒன்று இலக்கணமுடையது மற்றொன்று போலி.
இவ்விரு சொற்களில் ம, மை என்ற ஒர் எழுத்து மட்டுமே மாற்றம் பெற்றுள்ளது. ஆயினும் பொருள் மாற்றம் பெறவில்லை.
இவ்வாறு ‘ஒரு சொல்லில் உள்ள எழுத்துக்களில் ஓர் எழுத்திற்குப் பதிலாக வேறொர் எழுத்து வந்து அதே போருள் தருவதனைப் போலி என்பர்.
போலி வகைகள்
இப்போலி, முதற்போலி, இடைப்போலி, கடைப்போலி, முற்றுப்போலி, இலக்கணப்போலி என ஐந்து வகைப்படும்.
முதற்போலி - முதல் எழுத்து போலியாக வருதல்
இடைப்போலி - இடை எழுத்து போலியாக வருதல்
கடைப்போலி - கடை எழுத்து போலியாக வருதல்
முற்றுபோலி – அனைத்து எழுத்துகளும் போலியாக வருதல்
இலக்கணப்போலி – இலக்கணம் உடையது போல வருதல்.
முதற்போலி
சொல்லின் முதல் எழுத்து இருக்கவேண்டிய இடத்தில் வேறோர் எழுத்து வந்தாலும் பொருள் மாறாமல் வருவது முதற்போலி எனப்படும்
எ.கா. மயல் – மையல், மஞ்சு – மைஞ்சு
இவ்விரு சொற்களில் உள்ள முதல் எழுத்து (ம – மை) என மாறி இருந்தாலும் பொருள் மாறவில்லை. இவ்வாறு, சொல்லின் முதல் எழுத்து இருக்கவேண்டிய இடத்தில் வேறோர் எழுத்து வந்தாலும் பொருள் மாறாமல் வருவது முதற்போலி எனப்படும்.
இடைப்போலி
சொல்லின் இடையில்(நடுவில்) ஓர் எழுத்து இருக்கவேண்டிய இடத்தில் வேறோர் எழுத்து வந்தாலும் பொருள் மாறாமல் வருவது இடைப்போலி எனப்படும்.
எ.கா. அரசன் – அரைசன், அமச்சர் – அமைச்சர்
இவ்விரு சொற்களில் இடையில் உள்ள எழுத்து (ர – ரை), (ம – மை) என மாறி இருந்தாலும் பொருள் மாறவில்லை. சொல்லின் இடையில்(நடுவில்) ஓர் எழுத்து இருக்கவேண்டிய இடத்தில் வேறோர் எழுத்து வந்தாலும் பொருள் மாறாமல் வருவது இடைப்போலி எனப்படும்.
கடைப்போலி
சொல்லின் கடைசியில் (இறுதியில்) ஓர் எழுத்து இருக்கவேண்டிய இடத்தில் வேறோர் எழுத்து வந்தாலும் பொருள் மாறாமல் வருவது கடைப்போலி எனப்படும்.
எ.கா. நிலம் – நிலன், அறம் – அறன்
இவ்விரு சொற்களில் கடைசியில் உள்ள எழுத்து (ம் – ம்) என மாறி இருந்தாலும் பொருள் மாறவில்லை. சொல்லின் கடைசியில் (இறுதியில்) ஓர் எழுத்து இருக்கவேண்டிய இடத்தில் வேறோர் எழுத்து வந்தாலும் பொருள் மாறாமல் வருவது கடைப்போலி எனப்படும்.
முற்றுப்போலி
சொல்லில் உள்ள அனைத்து எழுத்துகளும் மாறி இருந்தாலும் பொருள் மாறாமல் வருவது முற்றுப்போலி எனப்படும்.
எ.கா. ஐந்து – அஞ்சு
இச்சொல்லில் உள்ள முதல் எழுத்து, இடை(நடு) எழுத்து, கடை(இறுதி) எழுத்து என அனைத்து எழுத்துகளும் மாறி இருக்கின்றன. எனினும் ஐந்து என்ற பொருள் மாறவில்லை. இவ்வாறு, சொல்லில் உள்ள அனைத்து எழுத்துகளும் மாறி இருந்தாலும் பொருள் மாறாமல் வருவது முற்றுப்போலி எனப்படும்
இலக்கணப்போலி
இலக்கண வழக்கில் உள்ள ஒரு சொல் நடைமுறையில் அதாவது பேச்சு வழக்கில் முன்பின்னாக மாறி இருந்தாலும் பொருள் மாறாமல் வருவது இலக்கண போலி எனப்படும்.
எ.கா. தெரு நடு - நடுத்தெரு, வாய்க்கால் - கால்வாய்
மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் சொற்கள் முன்பின்னாக மாறியிருந்தாலும் பொருள் மாறவில்லை. இவ்வாறு, இலக்கண வழக்கில் உள்ள ஒரு சொல் நடைமுறையில் அதாவது பேச்சு வழக்கில் முன்பின்னாக மாறி இருந்தாலும் பொருள் மாறாமல் வருவது இலக்கண போலி எனப்படும்.


