
WATCH VIDEO AND CLICK DOWNLOAD
மூவகை மொழிகள்
ஓர் எழுத்து, தனியாகவோ பல எழுத்துகள் தொடர்ந்தோ பொருள் தருவது சொல் எனப்படும்.
தமிழ்ச் சொற்களை தனிமொழி, தொடர்மொழி, பொதுமொழி என மூவகைப்படுத்துவர். இதனை மூவகை மொழிகள் என்பர்.
தமிழில் உள்ள அனைத்துச் சொற்களும் இந்த மூவகை மொழியுள் அடங்கும்.
தனிமொழி
ஒருசொல் தனித்து நின்று தன் பொருளை உணர்த்துவது, தனிமொழி எனப்படும்.
இதனை ஒருமொழி என்றும் கூறுவர்.
இத்தனிமொழி பெயர், வினை, இடை, உரி என்ற நால்வகைச் சொற்களிலும் அமையும்.
நிலம், முருகன், இந்தியன் என்பன பெயர்த் தனிமொழிகளாகும்
வா, நட, போ, வருவான் என்பன வினைத் தனிமொழிகளாகும்.
கொல்(ஐயம்) என்ற சொல் இடைத் தனிமொழியாகும்.
சால(மிகுதி) என்ற சொல் உரித் தனிமொழியாகும்.
தொடர்மொழி
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் தொடர்ந்து வந்து பொருளை உணர்த்துவது தொடர்மொழி எனப்படும்.
எ.கா: படம் பார்த்தான்
இவ்வாறு வரும் தொடர்மொழியில் உள்ள ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு பொருள் தரும்.
இவ்வாறு இரண்டு சொற்கள்தான் வரவேண்டுமென்பதல்ல. ‘எங்கள் ஊர் மிகப் பெரியது’ என்பன போல பல சொற்கள் தொடர்ந்து நின்று பொருள் தருவதும் தொடர்மொழிதான்.
பொதுமொழி
ஒரு சொல் தனித்து நின்று ஒருபொருளையும், அச்சொல்லே பிரிந்து நின்று வேறு வேறு பொருளைகளையும் தருவது பொதுமொழி எனப்படும்.
இது தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவதால், பொதுமொழி எனப்பட்டது.
எ.கா: அந்தமான், பலகை, வைகை
அந்தமான்’ என்பது ஒரு தீவையும், அச்சொல்லே அந்த+மான் எனப் பிரிந்து நின்று அந்த மான் (விலங்கு) என வேறு பொருளையும் தருகின்றது.
இச்சொல் மட்டுமல்லாமல்,தாமரை, கொட்டு, எட்டு, வேங்கை என்பனவும் பொதுமொழிகள்தான்
தாமரை – ஒரு மலர்
தா+மரை – தாவுகின்ற மான்
கொட்டு – கொட்டுதல் வினை
கொள்+து – கொள்ளைச் சாப்பாடு
எட்டு – ஓர் எண்
எள்+து – எள்ளைச் சாப்பிடு
வேங்கை – புலிவகை
வேம்+கை – வேகின்ற கை
இவ்வாறு வருவனவெல்லாம் பொதுமொழிகளேயாகும்.


