Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, July 8, 2019

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள்: இன்று கலந்தாய்வு தொடக்கம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்குகிறது. முதல் நாளில் மாற்றுத் திறனாளிகள், ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.
அதற்கு அடுத்து வரும் நாள்களில், பொதுப் பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை தொடங்குகிறது. முன்னதாக, கலந்தாய்வு நடைபெறும் ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், தனியார் கல்லூரிகளிலும் அரசு ஒதுக்கீட்டுக்கென 3,968 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அதேபோன்று, பல் மருத்துவத்துக்கான பிடிஎஸ் படிப்புகளுக்கு 1,070 இடங்கள் உள்ளன.
நிர்வாக ஒதுக்கீட்டை எடுத்துக் கொண்டால் தனியார் கல்லூரிகளில் மொத்தம் 852 எம்பிபிஎஸ் இடங்களும், 690 பிடிஎஸ் இடங்களும் இருக்கின்றன. அந்த இடங்களுக்காக ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கும் நடைமுறை, கடந்த மாதம் 7-ஆம் தேதி தொடங்கி 20-ஆம் தேதி வரை நடைபெற்றது.


நிகழாண்டில் தமிழகத்தில் மொத்தம் 1.23 லட்சம் பேர் நீட் தேர்வெழுதியிருந்த நிலையில், அவர்களில் 59,785 பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த இரு ஆண்டுகளைக் காட்டிலும் தேர்ச்சி விகிதம் 9 விழுக்காடு அதிகரித்து, 48.70 சதவீதமாக அதிகரித்தது. இதனால், முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் அதிக அளவிலான விண்ணப்பங்கள் நிகழாண்டில் சமர்ப்பிக்கப்பட்டன. மொத்தம் 59,756 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக மருத்துவக் கல்வி இயக்குநரக தேர்வுக் குழு தெரிவித்தது.
அதைத் தொடர்ந்து, விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 11,741 மாணவர்கள், 19,612 மாணவிகள் என மொத்தம் 31,353 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
அதேபோன்று, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான பட்டியலில் 9,366 மாணவர்கள், 16,285 மாணவிகள் என மொத்தம் 25,651 பேருக்கு தரவரிசைகள் வழங்கப்பட்டிருந்தன.


இந்நிலையில், அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வு ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் திங்கள்கிழமை தொடங்குகிறது. மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 53 பேருக்கும், விளையாட்டு வீரர்கள் பிரிவில் 52 பேருக்கும், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் 558 பேருக்கும் முதல் நாள் கலந்தாய்வில் பங்கேற்குமாறு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அவர்களுக்கான கலந்தாய்வு நிறைவடைந்தவுடன், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (ஜூலை 9) தொடங்கி 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதன் பின்னர் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறும்.

Popular Feed

Recent Story

Featured News