Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, July 15, 2019

பொதுமக்கள் அமைதியாக இருந்தால் புதிய கல்விக்கொள்கை திணிக்கப்படும்: நடிகர் சூர்யா அச்சம்..!



புதிய கல்விக்கொள்கை குறித்த கருத்தரங்கத்தில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சூர்யா பொதுமக்கள் அமைதியாக இருந்தால் புதிய கல்விக்கொள்கை திணிக்கப்படும் என கூறினார்.

சென்னையில் அகரம் அறக்கட்டளை சார்பில் புதிய கல்விக்கொள்கை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது:-

தகுதித்தேர்வு, நுழைவுத்தேர்வில் மட்டும் கவனம் செலுத்தப்படுகிறது. ஓராசிரியர் பள்ளிகள் மூடப்படும் என்று கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைத்து இருப்பது சரி அல்ல. ஓராசிரியர் பள்ளியை மூடினால் மாணவர்கள் எங்கே செல்வார்கள்.

சமமான கல்வியை கொடுக்காமல் கல்வி தரத்தை எப்படி உயர்த்த முடியும். புதிய கல்வி கொள்கை குறித்து ஆசிரியர்கள் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும். 30 கோடி மாணவர்களின் எதிர்காலம் தொடர்புடையது புதிய கல்விக்கொள்கை.



ஆரம்ப கல்வியிலேயே மூன்று மொழிகளை திணிக்க கூடாது. பொதுமக்கள் அமைதியாக இருந்தால் புதிய கல்விக்கொள்கை திணிக்கப்படும். 5ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தினால் இடை நிற்றல் அதிகரிக்கும். 6.5 கோடி மாணவர்கள் பள்ளிபடிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர். அரசு பள்ளிகளில் போதுமான ஆசிரியர் இல்லை.

ஆசிரியர் இல்லாமல் படிக்கும் மாணவர்கள் எப்படி நீட் தேர்வு எழுதுவார்கள். கலை அறிவியல் கல்லூரியில் சேர புதிய கல்விக்கொள்கையில் நுழைவுத்தேர்வு உள்ளது.

கிராமப்பகுதிகளுக்கு அருகே உள்ள கல்லூரிகள் மூடப்படக்கூடிய அபாயம் உள்ளது. 50 ஆயிரம் கல்லூரிகளை 12 ஆயிரம் கல்லூரிகளாக குறைக்க முயற்சி நடக்கிறது. கல்லூரிகளின் எண்ணிக்கையை குறைத்தால் உயர்கல்வி கற்போர் எண்ணிக்கை எப்படி அதிகரிக்கும்.

60% மாணவர்கள் அரசு பள்ளிகளில் தான் படிக்கிறார்கள், புதிய கல்விக்கொள்கை குறித்து விரிவாக விவாதிக்க வேண்டியது அவசியம். 10-க்கும் குறைவான மாணவர்கள் உள்ள அரசு பள்ளிகளை மூடுவது சரியல்ல என கூறினார்.