Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, July 25, 2019

மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் இனி இல்லை திட்டத்தை நிறுத்த அரசு முடிவு?:


அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்துக்கு இந்த ஆண்டு வழங்கப்பட வேண்டிய நிதி வழங்கப்படாததால், இந்த திட்டம் இத்துடன் கைவிடப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

2017-18ம் நிதியாண்டில் ₹16 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்திய தணிக்கை துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த 11, 12வது வகுப்பு பயிலும் மாணவிகள் கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக விலையில்லா மிதிவண்டி திட்டத்தை 2001ல் தொடங்கி வைத்தார். பின்பு இந்த திட்டம் அனைத்து தரப்பினருக்கும் விரிவுபடுத்தப்பட்டது.



மாணவிகள் பயன் பெறுவதற்காக திமுக ஆட்சி காலத்திலும் விலையில்லா மிதிவண்டி திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்திற்கு பள்ளி கல்வித்துறை மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கடந்த 2013-14ம் ஆண்டு 217 கோடி ரூபாயும், 2014-15ம் ஆண்டு 218 கோடியும், 2015-16ம் ஆண்டு 235 கோடியும், 2016-17ம் ஆண்டு 250 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், 2017-18ம் நிதியாண்டில் வெறும் 16 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய தணிக்கை துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018-19ம் ஆண்டு கொள்கை விளக்க குறிப்பிலும் இந்த திட்டம் குறித்தே குறிப்பிடப்படவில்லை.



மேலும் 2019-20ம் ஆண்டிற்கான பள்ளிகல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பில், விலையில்லா மிதிவண்டி திட்டத்தின் மூலம் 2017-18 மற்றும் 2018-19ம் கல்வியாண்டில் 11.56 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளதாக மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2019-20ல் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றோ, நடப்பு ஆண்டிற்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு எனவும் குறிப்பிடப்படவில்லை. எனவே 2016-17ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், தொடர்ந்து இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடும் 90 சதவீதம் குறைந்துள்ளது.

இதன் காரணமாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிடுகிறத என்ற கேள்வி எழுந்துள்ளது.



தமிழக அரசு சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் முறையாக செயல்படுத்தபடவில்லை என்று கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மாணவர்கள் போராட்டம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் நிறுத்தப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால் எதிர்ப்பு கிளம்பும் என்பதால், தமிழக அரசு மறைமுகமாக இந்த திட்டத்தை நிறுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.