Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, July 25, 2019

நிர்வாக ஒதுக்கீட்டில் உயர்கல்வி பெறும் எஸ்சி-எஸ்டி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மறுப்பு: மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ்


நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் உயர்கல்வி பயிலும் எஸ்சி-எஸ்டி மாணவர்களுக்கான உதவித்தொகை மறுக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மதுரை, உலகனேரியைச் சேர்ந்த பழனிவேலு, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பிளஸ் 2க்கு பிறகு உயர்கல்வி படிக்கும் எஸ்சி - எஸ்டி மாணவர்களுக்கான புதிய கல்வித் உதவித்தொகை வழங்கும் திட்டம் மத்திய அரசால் கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது. புதிய திட்டத்தின்படி, நிர்வாக ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கு கல்விஉதவித்தொகை மறுக்கப்பட்டுள்ளது.இது அரசியலமைப்பு சட்டத்திற்கும், மாநில கொள்கைக்கும் எதிரானது.



மாணவர்களை பாகுபாட்டுடன் பார்க்கும் வகையில் உள்ளது. தற்போது தமிழகத்தில் இன்ஜினியரிங் படிப்புகளுக்கான கவுன்சலிங் நடந்து வருகிறது. இதில், கல்வி உதவித்தொகை கிடைக்காது என்பதால், நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் பலர் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் உயர்கல்வி பெறும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மறுக்கும் மத்திய அரசின் அறிவிப்புக்கும், இதன் கீழான ஏஐசிடிஇவின் அறிவிப்பிற்கும் தடை விதித்தும், ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.புகழேந்தி ஆகியோர், மனு குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.