Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, August 28, 2019

2,449 தற்காலிக முதுநிலை ஆசிரியர்களை நியமிக்க அரசாணை வெளியீடு



தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் நியமித்துக் கொள்ள பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2,449 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக்கொள்வது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித் துறை செயலர் பிரதீப் யாதவ் செவ்வாய்க்கிழமை அரசாணை பிறப்பித்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் 2,449 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், மாணவர்களின் கல்வி பாதிக்கக் கூடாது என்ற காரணத்தால் இந்த காலிப் பணியிடங்களில் உடனடியாக தகுதியான நபர்களை தற்காலிக ஆசிரியர்கள் என்ற அடிப்படையில் நியமனம் செய்துகொள்ளலாம்.

தமிழ், இயற்பியல், ஆங்கிலம், கணிதம், உயிரியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், பொருளியல், வணிகவியல் போன்ற முக்கிய பாடங்களில், தங்களுடைய பள்ளிகளில் ஏதேனும் காலிப் பணியிடங்கள் இருந்தால், அதன் காரணமாக மாணவர்கள் போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் அவதியுறும் சூழ்நிலை இருப்பின், உடனடியாக பள்ளிக்கு அருகில் வசிக்கும் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு அந்த இடங்களை நிரப்ப வேண்டும்.
ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை 5 மாதங்களுக்கு மட்டும் 2,449 தற்காலிக முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களை பள்ளிகளே நேரடியாக நியமித்துக் கொள்ளலாம். மாதம் ரூ.10 ஆயிரம் என தொகுப்பூதியத்தின் அடிப்படையிலே தற்காலிக ஆசிரியர்களை அந்தந்த பள்ளிகள் பணியமர்த்திக் கொள்ளலாம். இந்த நியமனத்தை இந்த மாதம் முதலே பள்ளிகள் செய்துகொள்ளலாம். பள்ளியின் தலைமை ஆசிரியர், மேல்நிலைப் பிரிவுக்கான உதவித் தலைமை ஆசிரியர் மற்றும் மூத்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர் ஆகியோரை உறுப்பினராகக் கொண்ட குழு மூலமாக தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக் கொள்ளலாம். தேர்வு செய்யும்போது இது முற்றிலும் தற்காலிகமானது என்பதை நியமனம் செய்யப்படும் நபர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.


பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நிரப்பப்படும் ஆசிரியர்கள் பணிபுரியும் பணியிடத்துக்கு மேற்கண்ட 5 மாதங்களுக்குள் பதவி உயர்வு மூலமாகவோ அல்லது நேரடி நியமனம் மூலமாகவோ அல்லது மாறுதல் மூலமாகவோ நிரப்பப்பட்டால் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நிரப்பப்படும் ஆசிரியர்களை உடனடியாக பணிவிடுப்பு செய்ய வேண்டும்.
இந்த உத்தரவின் பேரில் நியமனம் செய்யப்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் குறித்த விவரங்களை வரும் செப்.5-ஆம் தேதிக்குள் பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனுப்பி வைக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.
வேலூரில் 198, சென்னையில் 15...: மேலும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் 32 மாவட்டங்களிலும் நியமனம் செய்யப்பட வேண்டிய முதுநிலை ஆசிரியர்களின் காலிப் பணியிட எண்ணிக்கை விவரம் குறித்து அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக வேலூர்-

198, விழுப்புரம்-186, திருவண்ணாமலை- 169, நாகப்பட்டினம்-164, திருவள்ளூர்-148, திருவாரூர்-141, காஞ்சிபுரம்- 157 காலிப்பணியிடங்கள் உள்ளன. குறைந்தபட்சமாக சென்னை-15, தேனி-25, தூத்துக்குடி-36, விருதுநகர்-39, தருமபுரி-25 ஆகிய மாவட்டங்களில் முதுநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment