Search This Blog

Tuesday, September 24, 2019

பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கல்வித்துறை உத்தரவு

0 comments
பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்களுக்கு பருவமழைக் காலங்களில் ஏற்படும் இடர்பாடுகளையும், விபத்துகளையும் தடுப்பதற்காக ஆய்வு அலுவலர்களும், பள்ளித் தலைமை ஆசிரியர்களும் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சில அறிவுரைகளை கல்வித்துறை வழங்கியுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு திங்கள்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:


மாணவர்கள் பள்ளிக்கு மிதிவண்டிகளில் வரும்போது சகதிகளில் வழுக்கி விழக்கூடிய அபாயத்தை எடுத்துக்கூறி பாதுகாப்பாக வர அறிவுறுத்த வேண்டும். மழைக்காலங்களில் மாணவர்களும் அவர்தம் உடமைகளும் மழையில் நனையாமல் இருக்கும் பொருட்டு மழைக்கோட்டுகள் அல்லது குடைகளைப் பயன்படுத்த அறிவுரை வழங்க வேண்டும். மழை காரணமாக பள்ளியில் ஏதேனும் வகுப்பறைகள் பாதிக்கப்பட்டு இருந்தால் அவற்றை பயன்படுத்தாமல் பாதுகாப்பாக பூட்டி வைக்க வேண்டும்.
தொடர்மழை காரணமாக பள்ளியின் சுற்றுச்சுவர் ஈரப்பதத்துடன் இருந்தால் அதன் அருகில் மாணவர்கள் செல்லாதபடி கண்காணிக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் உள்ள நீர்த்தேக்க பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டிகள், நீர்த்தேக்க தொட்டிகள் இருந்தால் அவற்றை மூடி வைக்க வேண்டும்.
செய்ய வேண்டியவை- செய்யக் கூடாதவை: பள்ளி கட்டடங்களின் மேற்கூரைகள் உறுதியாக இருக்கிறதா என்று அவ்வப்போது சோதிக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் கட்டடப் பணிகள் நடந்தால் அதன் அருகில் மாணவர்கள் செல்ல தடை விதிக்க வேண்டும். அந்த இடங்களைச் சுற்றி தடுப்பு ஏற்படுத்த வேண்டும். மாணவர்களை கொண்டு மின் சாதனங்களை இயக்கக் கூடாது.


மழைக்காலத்தில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை குறித்து அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் வகுப்பறையிலேயே ஆசிரியர்களால் தெளிவான விளக்கம் அளிக்கப்பட வேண்டும். மழைக்கால மாற்றங்களால் ஏற்படும் நோய்களில் இருந்து பாதுகாக்க அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளில் சென்று சிகிச்சை பெற அறிவுறுத்த வேண்டும். மேற்கண்ட அறிவுரைகளை அவ்வப்போது கண்காணித்து வர வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment