Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, September 27, 2019

தினமும் ஒரே மாதிரியான உணவை உண்ணக்கூடாதாம் - ஏன்?



மனிதன் உயிர் வாழ உணவு மிகவும் இன்றியமையாதது. அதுவும் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பது அனைவருக்குமே தெரியும். உங்களுக்கு தினமும் காலை உணவாக தோசை அல்லது இட்லி சாப்பிட பிடிக்குமா? அல்லது தினமும் மாலையில் பசலைக் கீரை ஜூஸ் குடிப்பீர்களா? ஆம் என்றால், நீங்கள் உடனே உங்கள் உணவுப் பழக்கவழக்கத்தில் சிறு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டியது அவசியம்.



உங்களுக்கு தினமும் ஒரே மாதிரியான உணவை உட்கொள்ள அழுத்துப் போயிருக்காது. நீங்கள் சிம்பிளாக மற்றும் ஆரோக்கியமான உணவைத் தான் உண்பது போன்று தெரியும். ஆனால், தினமும் ஒரே உணவை உண்பது உடலுக்கு ஆரோக்கியமல்ல என்பது தெரியுமா?

ஆம், இந்த கட்டுரையில் ஏன் தினமும் ஒரே உணவை சாப்பிடக்கூடாது என்பதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஊட்டச்சத்து குறைபாடு
நமது உடலின் முறையான செயல்பாட்டிற்கு பல்வேறு வகையான மைக்ரோ மற்றும் மாக்ரோ ஊட்டச்சத்துக்கள் தேவை. இத்தகைய ஊட்டச்சத்துக்கள் பல்வேறு உணவுகள் மற்றும் காய்கறிகளை உண்பதன் மூலமே கிடைக்கும். ஒரே மாதிரியான பழம் அல்லது காய்கறிகளை ஒருவர் சாப்பிட்டால், பின் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும். எனவே நீங்கள் தினமும் சாப்பிடும் போது, உங்கள் தட்டில் பலவகையான பழங்கள் மற்றும் காய்கறிகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.





குடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்

பல்வேறு வகையான உணவுகளை உண்பதன் மூலும், குடலில் நல்ல ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் செழித்து வளரும். இதனால் நோயெதிர்ப்பு மண்டலம் மேம்படுவதோடு, ஒட்டுமொத்த செரிமான மண்டலமும் சிறப்பாக செயல்படும். எனவே அன்றாடம் உண்ணும் உணவில் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளான நொதிக்க வைக்கப்பட்ட உணவுகள், காய்கறிகள் மற்றும் பழங்கள் இருக்குமாறு உறுதி செய்து கொள்ளுங்கள்.



எடை இழப்பை தாமதப்படுத்தும்

தினமும் ஒரே மாதிரியான உணவை உண்பது எடையைக் குறைப்போருக்கு மிகவும் ஆபத்தானது. நீங்கள் உங்கள் எடையைக் குறைக்க நினைத்தால், தினமும் ஒரே உணவை உண்பதைத் தவிர்த்திடுங்கள். பி.எல்.ஓ.எஸ் ஒன்னில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, ஒரே மாதிரியான உணவைக் கொண்டவர்களுடன் ஒப்பிடும்போது, பலவகையான பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட்டவர்கள் விரைவாக உடல் எடையை குறைக்க முடிந்ததாம்.




குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்கள் மட்டும் அதிகமாகும்

குறிப்பிட்ட உணவுகளை மட்டும் அதிகம் சாப்பிடுவதால், உடலுக்கு வேண்டிய இதர சத்துக்கள் கிடைக்காமல், ஒரே சத்து உடலில் அதிகரித்து, உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்திவிடும். உதாரணமாக, மஞ்சளை ஒருவர் அளவுக்கு அதிகமாக எடுத்தால், அது கல்லீரல் செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்திவிடும்.

உண்ணுவதில் கோளாறு

ஆம், ஒரே மாதிரியான உணவை தினமும் சாப்பிடும் போது, அதனால் மற்ற உணவுகளின் மீதுள்ள நாட்டம் குறைவதோடு, மற்ற உணவுகளை சாப்பிட பிடிக்காமல் போகலாம். இதன் விளைவாக ஊட்டச்சத்தின்மை ஏற்படுவதோடு, எதிர்பாராமல் திடீரென்று அதிகளவு உடல் எடையை இழக்கக்கூடும்.