Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, November 14, 2019

சர்க்கரை மீது அக்கறை


வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். நீரிழிவு நோயை குணப் படுத்துவதற்கு இன்சுலின் மருந்தை சார்லஜ் பெஸ்ட் என்பவருடன் இணைந்து கண்டுபிடித்த பிரெட்ரிக் பேண்டிங்கை கவுரவப் படுத்தும் விதமாக அவரது பிறந்த தினமான நவ., 14, உலக நீரிழிவு நோய் தினமாக ஐ.நா., அறிவித்தது. 'நீரிழிவு பாதிப்பில் இருந்து உங்கள் குடும்பத்தை பாதுகாத்திடுங்கள்' என்பது இந்தாண்டு மையக் கருத்து. உடலில் இன்சுலின் உற்பத்தி மற்றும் அதன் செயல்பாடுகளில் குறை ஏற்படுவதால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது.



இதனால் ஏற்படுவதே நீரிழிவு நோய். இதில் இரண்டு வகைகள் உள்ளன. 'டைப் -1' என்பது இன்சுலின் முற்றிலும் சுரக்காமல் நின்று விடுவது. 'டைப் - 2' என்பது இன்சுலின் சுரக்கும் ஆனால் முறையாக பயன்படுத்த முடியாது. இவ்வகைதான் நீரிழிவு நோய் உள்ளவர்களில் 90 சதவீதம் பேருக்கு உள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.வாழ்நாள் முழுவதும் துரத்தும் இந்த நோய், குழந்தைகளையும் விட்டுவைப்பதில்லை. இவ்வகை குழந்தைகளுக்கு பெற்றோரின் கண்காணிப்பு அவசியம்.



அவர்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதோ, குறைவதோ கூட ஆபத்தில் முடியலாம்.சத்தான உணவு, உடற்பயிற்சி, உடல் எடையை கட்டுப்படுத்துதல், தேவைப்பட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவை சோதிப்பது மற்றும் மருத்துவர் ஆலோசனை ஆகியவற்றை பின்பற்றினால், நீரிழிவில் இருந்து பாதுகாக்கலாம். உடல் எடை அதிகரித்தல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அடிக்கடி பசி, அதிக தாகம் போன்றவை இதன் அறிகுறிகள். துவக்கத்திலேயே இதற்கு சிகிச்சை எடுக்கத் தவறினால் கண், இருதயம், சிறுநீரகம், கால்பாதம் ஆகியவற்றை பாதிப்படைய செய்யும்.