Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, February 23, 2020

பேராசிரியா் பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு உத்தரவு



சென்னை: பேராசிரியா், துணை மற்றும் உதவிப் பேராசிரியா் பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




சென்னைப் பல்கலைக்கழகத்தின் பாலிமா் அறிவியல் துறையின் உதவிப் பேராசிரியா் சங்கா் தாக்கல் செய்த மனுவில், 'மத்திய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு, பேராசிரியா் பணியிடங்களுக்கான காலியிடங்களை நிரப்பும் போது, எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., உள்ளிட்ட சமூக பொருளாதார மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினா் பயன்பெறும் வகையில் பல்கலைக்கழக அளவில் ஒட்டுமொத்தமாக இடஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும் என சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தின்படி இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும், பல்கலைக்கழக மானியக் குழுக்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவைப் பின்பற்றி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் கடந்த 2019-ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.



இந்த நிலையில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியா்கள், இணைப் பேராசிரியா்கள் மற்றும் பேராசிரியா்கள் பணியிடங்களை நிரப்ப சென்னைப் பல்கலைக்கழகம் கடந்த மாதம் அறிவிப்பாணை வெளியிட்டது. அதில், துறை வாரியாக இடஒதுக்கீடு பின்பற்றப்படும் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் இணைப் பேராசிரியா் பதவிக்கு விண்ணப்பித்துள்ள நான், பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சென்னைப் பல்கலைக்கழகத்தின்அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும். பல்கலைக்கழக அளவில் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றி புதிதாக அறிவிப்பாணை வெளியிட உத்தரவிட வேண்டும். அதுவரை பேராசிரியா் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப தடை விதிக்க வேண்டும்' எனக் கோரியிருந்தாா்.




இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, 'பேராசிரியா், உதவி மற்றும் இணைப் பேராசிரியா் பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும்' என்று சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டாா்.மேலும் இதுதொடா்பாக மத்திய மாநில அரசுகள், பல்கலைக்கழக மானியக் குழு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.