Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, February 23, 2020

சீனா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் கலப்பட லவங்க பட்டையால் சிறுநீரகம் பாதிக்கும் அபாயம்


வேலூர்: இந்தியாவில் ஆண்டுக்கு 20 லட்சம் பேருக்கு சிறுநீரகம் செயலிழக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இதில் தமிழகத்தில் மட்டும் 65 பேருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது. குட்கா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்துவதால் சிறுநீரகம் பாதிக்கப்படும் என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். உணவு பொருட்களாலும் சிறுநீரகம் பாதிக்கப்படலாம் என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.



மேலும் இந்தியாவில் கலப்பட லவங்க பட்டை அதிகளவில் இருப்பதால் பலருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது: பிரியாணி போன்றவற்றில் பயன்படுத்தப்படும் லவங்கப்பட்டைகள் இலங்கையில்தான் அதிகளவில் விளைகிறது. இது சிலோன் லவங்க பட்டை என்று அழைக்கப்படும். இந்நிலையில் சீனா, இந்தோனேசியா, வியட்நாம் போன்ற நாடுகளில் காசியா வகை மரத்தில் இருந்து எடுக்கப்படும் பட்டைகள்தான் இந்தியாவில் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது.




இதன் மூலம் விற்பனையில் 300 சதவீதம் அதிகமாக லாபம் கிடைக்கிறது. இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் லவங்கப்பட்டையும், சீனா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காசியா பட்டையும் ஒரே மாதிரி வாசனையில் உள்ளது. இதனால், பொதுமக்கள் கலப்பட பட்டையை கண்டுபிடிப்பதில்லை.இந்த காசியா பட்டையை பிரியாணி உள்ளிட்ட உணவுப் பொருட்களில் பயன்படுத்துவதால் நுரையீரல், கல்லீரல் ஆகியவற்றின் இயக்கம் பாதிப்படையும். மேலும் மனிதர்களின் சிறுநீரகத்தை பாதிக்கக்கூடிய ரசாயனங்கள் காசியா பட்டையில் இருக்கிறது. எனவே, கலப்பட காசியா பட்டையை தவிர்க்க வேண்டும்.வீட்டிலேயே உணவு பொருள் கலப்படத்தை கண்டுபிடிப்பதில் இருக்கும் வழிமுறைகளை அனைவரும் தெரிந்து ெகாள்ள வேண்டும். கலப்படம் குறித்து உணவு பாதுகாப்பு துறையில் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.




ஆண்டுக்கு 12 ஆயிரம் டன் இறக்குமதி
இலங்கையில் இருந்து குறைந்த அளவில் மட்டுமே லவங்க பட்டைகள் இறக்குமதி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் சீனா, இந்தோனேசியா, ஜெர்மனி போன்ற நாடுகளில் இருந்து ஆண்டுக்கு குறைந்தபட்சம் 12 ஆயிரம் டன் வரை காசியா பட்டைகள் இறக்குமதி செய்யப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பிரிட்டன், ஜெர்மனி, அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாகவே காசியா பட்டையை உணவு பொருட்களில் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பெயரளவிற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் காசியா பட்டை இறக்குமதிக்கு முழுவதுமாக தடை விதித்து தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டியது அவசியம்.




3ல் ஒரு பங்கு உணவில் கலப்படம்
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட சோதனையில் இந்தியாவில் கலப்பட உணவு பொருட்கள் விற்பனையில் தமிழகம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி, 3ல் ஒரு பங்கு உணவில் கலப்படம் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக உணவு பொருட்கள் தயாரிக்க பயன்படும் 40 வகையான பொருட்களில் அதிகளவில் கலப்படம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 201819ம் ஆண்டில் இந்தியாவில் 8 ஆயிரத்து 100 பேர் மட்டுமே உணவு பொருட்கள் கலப்படத்தில் தண்டிக்கப்பட்டு உள்ளனர். மேலும் இந்திய அளவில் ₹43 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. எனவே, கலப்படம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.




எலிகளை கொல்லும் விஷ மருந்து
இந்தியாவில் அதிகளவில் பயன்படுத்தப்படும் காசியா பட்டையில், காமரின் என்ற கெமிக்கல் இருப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த கெமிக்கலில் இருந்துதான் எலிகளை கொல்லும் விஷ மருந்துகள் தாயாரிக்கப்படுகிறதாம். இத்தகைய பட்டையை உணவில் பயன்படுத்தும்போது, மனிதர்களை மெல்ல கொல்லும் விஷமாக மாறிவிடுகிறது. உணவே மருந்து என்ற நிலையில், உணவே விஷமாகும் நிலை உள்ளது. எனவே, காசியா பட்டை மட்டுமின்றி கலப்பட உணவு பொருட்களை ஒழிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துள்ளது.