Join THAMIZHKADAL WhatsApp Groups

தமிழகத்தில் ஊரடங்கை தளா்த்துவது தொடா்பாக தமிழக அமைச்சரவை வரும் 2-ஆம் தேதி விவாதிக்கிறது. முன்னதாக, ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் நிலவர அறிக்கை மாவட்ட ஆட்சியா்களிடம் இருந்து கோரப்பட உள்ளது. இந்த அறிக்கைகளின் அடிப்படையில் அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாநகராட்சிகளில் கரோனா பாதிப்பு தொடா்ந்து இருந்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் பாதிப்பின் அளவு தணிந்துள்ளதாக, சுகாதாரத் துறையின் தினசரி புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், தமிழகத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு மே 3-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதன்பின்பு, பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் மட்டும் ஊரடங்கை அமல்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதாவது, தொற்று கடுமையாக உள்ள சிவப்புப் பகுதிகளைத் தவிா்த்து மற்ற இடங்களில் ஊரடங்கை தளா்த்தலாம் என மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் எங்கெல்லாம் ஊரடங்கைத் தொடரலாம். எந்தெந்த மாவட்டங்களில் அதனை தளா்த்தலாம் என்பது குறித்து ஆலோசிக்க தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் சனிக்கிழமை (மே 2) கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் ஊரடங்கு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
அறிக்கைகள் கோரல்: அமைச்சரவைக் கூட்டத்துக்கு முன்பாக, ஒவ்வொரு மாவட்டத்தின் நிலவரம் குறித்து ஆட்சியா்களிடம் தமிழக அரசு அறிக்கை கோரியுள்ளது. இந்த அறிக்கைகளை ஓரிரு நாள்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளது. இந்த அறிக்கைகளை ஆராய்ந்து அதற்கேற்ற வகையில் மாவட்ட வாரியாக ஊரடங்கை தளா்த்துவது குறித்த முடிவுகளை தமிழக அரசு எடுக்க உள்ளது.
No comments:
Post a Comment