Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, May 6, 2020

வாட்ஸ்அப்பில் பத்திரிகைகளின் நகல்களை பகிர்வது சட்டவிரோதம்: ஐ.என்.எஸ். எச்சரிக்கை



புதுடெல்லி: வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பத்திரிகைகளின் நகல்களை பகிர்வது சட்டவிரோதம் என்று ஐ.என்.எஸ். எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் மூன்றாவது முறையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டு கிடக்கின்றன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையில்லாமல் உள்ளனர். இந்நிலையில், பத்திரிகைகள் மிகுந்த சிரமத்துக்கு இடையே, இந்த கொரோனா கொள்ளைநோய் காலத்திலும் மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், பத்திரிகைகளை அப்படியே பிடிஎப் வடிவங்களில் நகல் எடுத்து, சமூகவலைதளங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் இதுபோன்ற பத்திரிகைகளின் நகல்கள் உலா வருகின்றன. இது பத்திரிகை துறையினரை வஞ்சிக்கும் செயலாகும். இதனால் இது சட்டவிரோதம் என்று இந்திய செய்தித்தாள்கள் கழகம் (ஐ.என்.எஸ்.) எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஐ.என்.எஸ். வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பத்திரிகை செய்திகளை பி.டி.எப். வடிவங்களில் நகல் எடுத்து வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் பகிர்வது சட்டவிரோதம். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக செய்தி நிறுவனங்கள் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரும் அபராதம் விதிக்க வேண்டும். செய்திகளையோ அல்லது செய்திகளின் ஒரு பகுதியையோ நகல் எடுப்பது சட்டவிரோதம்.
இதுபற்றி ஆப்கள், வலைதளங்கள் மற்றும் செய்தித்தாள்களில் செய்தி நிறுவனங்கள் குறிப்பிட வேண்டும். மேலும், பத்திரிகைகளின் பி.டி.எப். கோப்புகள் மற்றும் புகைப்படங்கள் பதிவிறக்கம் செய்வதில் வரம்புகள் நிர்ணயிப்பது மற்றும் தனிநபர்களை கண்டறிய பயன்பாட்டாளர் அடையாள குறியீடுகளை சேர்ப்பது மற்றும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு கூடுதலாக பி.டி.எப். கோப்புகளை பதிவிறக்கம் செய்வதில் இருந்து பயன்பாட்டாளர்களை தடுப்பது ஆகியவற்றை செய்தி நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ஐ.என்.எஸ். அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment