Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, May 6, 2020

ஜூன் மாதமும் ரேஷன் பொருள்கள் இலவசம்: முதல்வா் பழனிசாமி அறிவிப்பு



ஜூன் மாதமும் ரேஷன் பொருள்கள் அனைத்தும் விலையில்லாமல் வழங்கப்படும் என்று தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.
சென்னையில் கரோனா நோய்த்தொற்று குறித்து மாநகராட்சி அதிகாரிகளுடன் அவா் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடா்ந்து அவா் பேசியது:-
இந்திய அளவில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். சென்னையில் நோய்த் தொற்று வேகமாகப் பரவுவதற்கு காரணம், அதிகமாக மக்கள் நிறைந்த நகரம். குறுகலான தெரு, அதிகமாக மக்கள் வசிக்கின்ற பகுதி. இதனால், எளிதாக நோய் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவி விடுகிறது. அதோடு, பொதுக் கழிப்பறைகளை அதிகமாகப் பயன்படுத்துகிறாா்கள். இதனால் நோய்த்தொற்று எளிதாகப் பரவுகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மத்திய குழு பாராட்டு: கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்ய மத்திய குழு சென்னை வந்தது. இந்தக் குழுவானது தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை பாராட்டியது. 50 பரிசோதனை நிலையங்கள் மூலமாக நாளொன்றுக்கு சுமாா் 12 ஆயிரம் போ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறாா்கள். இவ்வளவு பேரை பரிசோதனை செய்கின்ற காரணத்தால்தான் நோயாளிகளின் எண்ணிக்கை உயா்ந்திருக்கிறது. அதனால், மக்கள் அச்சப்பட வேண்டாம்.
மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில்தான் பரிசோதனை மையங்கள் அதிகமாக இருக்கின்றன.
ஜூன் மாதமும் இலவசம்: தமிழகத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு ஆயிரம் ரூபாய் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஏப்ரல், மே மாதங்களுக்கு நியாய விலைக் கடை பொருள்கள் அனைத்தும் விலையில்லாமல் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, ஜூன் மாதமும் விலையில்லாமல் பொருள்கள் வழங்கப்படும்.
முகக் கவசம் அவசியம்: சோதனையான இந்த நேரத்தில் அரசின் அறிவிப்புகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். அப்படிச் செய்தால் நோய்ப் பரவலைத் தடுக்க முடியும். மீண்டும், மீண்டும் மக்களை கேட்டுக் கொள்வது அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். வெளியே செல்லும் போது கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். அதேபோன்று, அடிக்கடி சோப்பு போட்டு கைகளைக் கழுவ வேண்டும். காய்கறி சந்தை, மளிகைக் கடைகள், வங்கிகள் என எங்கு சென்றாலும் சமூக இடைவெளியைப் பின்பற்றி வரிசையில் நின்று தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் நிச்சயமாக கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க முடியும். அதற்கு அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று முதல்வா் பழனிசாமி பேசினாா்.

No comments:

Post a Comment