Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, June 3, 2020

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எதிர்கொள்வது எப்படி?.. ஆசிரியர்கள் முக்கிய அறிவுரை

10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தொடங்க 12 நாட்களே உள்ள நிலையில் கிராமப்புற மாணவர்கள் மட்டுமின்றி, நகர்ப்புற மாணவர்களும் 70 நாட்களுக்கு மேலாக பயிற்சி பெறாததால் தேர்வை எப்படி சந்திப்பார்கள் என்ற கவலையில் பெற்றோர்கள் ஆழ்ந்துள்ளனர். மாணவர்களை தயார்படுத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். தமிழகத்தில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு ஏப்ரலில் நடைபெறுவதாக இருந்தது. கொரோனா தொற்று பரவுவதன் காரணமாக தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. தொற்று பரவல் வேகமாக இருந்ததால் 2வதாக அறிவிக்கப்பட்ட தேர்வு தேதியும் ரத்து செய்யப்பட்டது.
இப்போது வருகிற 15ம் தேதியிலிருந்து தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் இருந்தாலும் ஜூன் 15ம் தேதி முதல் புதிய அட்டவணைப்படி 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு விடுபட்ட தேர்வும், பிளஸ் 2 தேர்வின் கடைசி தேர்வை எழுத வராத சுமார் 24 ஆயிரம் மாணவர்களுக்கும் தேர்வு எழுத மேலும் ஒரு வாய்ப்பும் வழங்கி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான பணிகளை அரசுத் தேர்வுத்துறை துரிதப்படுத்தியுள்ளது. ஒரு வகுப்பு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். தொற்று பாதிப்பு பகுதியில் உள்ள மாணவர்களுக்கு தனி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள்களை வைப்பதற்கு கூடுதல் கவர்கள் அனுப்பப்பட்டுள்ளன. மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளியிலேயே தேர்வு எழுதும் வகையில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறுவது உறுதியாகி விட்ட நிலையில் மாணவர்கள் பற்றிய கவலை பெற்றோருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 70 நாட்களாக வீட்டிலேயே இருக்கும் மாணவர்கள் பாடப்புத்தகங்களை புரட்டிப் பார்க்க நேரம் ஒதுக்கவில்லை. சில மாணவர்கள் சொற்ப நேரமே வீட்டில் இருந்து படிக்கின்றனர். இதனால் பெற்றோர்கள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து அரசு பள்ளி மற்றும் தலைமை ஆசிரியர்கள் கருத்துக் கூறுகையில், ‘‘தொடர் விடுமுறையால் மாணவர்களுக்கு அதிக கவனசிதறல் ஏற்பட்டுள்ளது உண்மை.
நகர்ப்புற மாணவர்கள் பொழுது போக்கிலும், கிராமப்புறங்களில் விவசாயப் பணிகளில் பெற்றோருக்கு உதவியாக இருப்பதிலும் காலத்தை கடத்திவிட்டனர். இருப்பினும் பொதுத்தேர்வு குறித்து எந்த அச்சமும் கொள்ள வேண்டாம். இனி வரும் நாட்களில் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினாலே போதும். பெற்றோரும் அவர்களை வேறு வேலை பார்க்காமல் இருக்கவும், கவன சிதறல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு படிக்கும் போது ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் தொலைபேசி மூலம் ஆசிரியர்களை எந்த நேரமும் தொடர்புகொண்டு தெளிவு பெறலாம்.
கல்வி தொலைக்காட்சியிலும் கவனித்து படிக்கவேண்டும். மாணவர்களை உற்சாகப்படுத்த ஆசிரியர்கள் தயாராக உள்ளனர். எனவே ஆசிரியர்களின் சேவைகளை தொலைபேசி மூலம் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு முககவசம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. எனவே அச்சமின்றி தேர்வு எழுத வாருங்கள்’’ என்றனர்.

No comments:

Post a Comment