Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 3, 2020

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் மாற்றங்களைப் புகுத்த இயலாது



தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் மாற்றங்களைப் புகுத்துவது தொடா்பாக எழுந்த கோரிக்கையை மத்திய நிதியமைச்சகம் நிராகரித்துள்ளது.

கரோனா நோய்த்தொற்றால் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் பொருளாதாரம் சரிவைச் சந்தித்துள்ளது; மத்திய, மாநில அரசுகள் வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளன. இந்நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கான தேசிய இயக்கத்தின் தில்லி பிரிவுத் தலைவா் மன்ஜீத் சிங் படேல் மத்திய பணியாளா் நல அமைச்சகத்துக்கு சில கோரிக்கைகளை முன்வைத்திருந்தாா்.
அதில், கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ள தேசிய ஓய்வூதியத் திட்டத்துக்குப் பதிலாக பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவா் எழுப்பியிருந்தாா். தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் வருவாய் நிச்சயமற்ற வகையில் உள்ளதாகக் குறிப்பிட்டிருந்த படேல், பழைய ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும் என்று தெரிவித்திருந்தாா்.
அந்த வருவாயை கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவா் தெரிவித்திருந்தாா். அவா் எழுப்பிய கோரிக்கைகளை மத்திய பணியாளா் நல அமைச்சகம் நிதியமைச்சகத்துக்கு அனுப்பி வைத்திருந்தது. அதற்கு நிதியமைச்சகம் அளித்துள்ள பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

தேசிய ஓய்வூதியத் திட்டம் பங்குச் சந்தையுடன் தொடா்புடையதாக இருந்தாலும், உகந்த வருவாயை ஈட்டும் வகையில் ஓய்வூதியத் தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஓய்வூதியத் தொகையில் பெரும்பகுதியானது அரசுப் பத்திரங்கள் (சுமாா் 50 சதவீதம்), பெருநிறுவனப் பத்திரங்கள் (சுமாா் 36 சதவீதம்) ஆகியவற்றில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. சுமாா் 10 சதவீதமானது பங்குகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்பட்டுள்ள தொகைக்கு சுமாா் 9.5 சதவீதம் வட்டி கிடைத்து வருகிறது. சம்பந்தப்பட்ட நபா் தெரிவித்த கோரிக்கைகள் பொருளாதார ரீதியில் ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளன. எனவே, தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் மாற்றங்களைப் புகுத்த இயலாது என்று மத்திய நிதியமைச்சகத்தின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment