Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, June 14, 2020

கானல் நீரில் தாகம் தணிக்கப் பார்க்கும் இணையவழிக் கல்வி - முனைவர் மணி கணேசன்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
இன்றைய கொரோனா பேரிடர் காலத்தில் அதிகம் பேசப்படும் பொருளாக இணையவழிக் கல்வி இருப்பது அறிந்த ஒன்று. ஒரு பிரிவினர் ஆசிரியர்களைப் பல்வேறு நம்பகத்தன்மை மற்றும் தனிநபர் தரவுப் பாதுகாப்பற்ற செயலிகளை முன்மொழிவதும் கூட்டத்திற்கான இணைப்பைப் பகிர்ந்து பல்வேறு பகிரிக் குழுக்கள் மூலமாக அழைப்பதும் பால்கனி அரசியல் போல் இணைப்பில் இணைந்தோர் மன மொழி குறித்து அக்கறையின்றித் தம் தொழில்நுட்ப புலமையைப் பறைசாற்றுவதையும் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். மற்றொரு பிரிவினர் நவீன கட்டணக் கொள்ளைக்கு உயர் மற்றும் நடுத்தர வர்க்க மாணவர்களையும் பெற்றோர்களையும் கட்டாயம் இணைப்பில் இணையச் சொல்லி வலியுறுத்தி வருவதும் நடப்புக் கேலிக்கூத்துகளாக நாடோறும் அரங்கேறி வருகின்றன.

இதுபோன்ற மாய வலைக்குள் அகப்படாமல் தொடர்பெல்லைக்கு அப்பால் அப்பாவி ஏழை, எளிய மற்றும் விளிம்பு நிலை மாணவர்கள் எப்போதும் இருந்து வருவது எண்ணத்தக்கது. இவர்களின் ஒரே புகலிடமாகத் திகழும் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவிப் பள்ளிகள் தரமான இணையவழிக் கல்வியை மாணவர்களுக்கு வழங்குவது குறித்து செய்வதறியாது காணப்படுகின்றன. அப்பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியப் பெருமக்கள் பலருக்கு தம் பள்ளிப் பிள்ளைகளுக்கும் நல்ல பயனுள்ள கட்டாய இலவச இணையவழிக் கல்வி வகுப்புகள் எப்பாடுபட்டாவது கிடைத்திட தணியாத ஆசையும் குன்றாத ஆர்வமும் நிரம்ப இருந்து என்ன பயன்? குறைந்த பட்சம் திறன்மிகு செல்பேசி அனைத்து மாணவர்களிடமும் இருக்க வேண்டுமல்லவா?

அவர்களுள் முக்கால்வாசி பேரிடம் இணைய வசதிகள் அடங்கிய செல்பேசிகள் புழக்கத்தில் இல்லா நிலையில் இணைய வழியிலான வகுப்புகளுக்குத் துளியும் இங்கு சாத்தியமற்ற நிலையே உள்ளது. இந்த நடப்பை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். கால்வாசி நபர்களில் பலர் இணைய இணைப்பு கிடைக்கப் பெறாமல் ஊருக்கு ஒதுக்குப்புறமான மரங்களின் உச்சியிலும் வீட்டுக்கூரைகளின் மேற்பரப்பிலும் மொட்டை மாடிகளின் முனைகளிலும் உயிரைப் பணயம் வைத்து இணைப்பு வேண்டி அல்லாடியது யாவரும் அறிந்ததே.

சக வகுப்பு மாணவர்களிடம் இதுபோன்ற இணைய வழியிலான வகுப்புகள் சலிப்பையும் களைப்பையும் ஏற்படுத்துவதோடு அல்லாமல் வீணான வெறுப்பும் கிடைக்கப்பெறாத ஏக்கமும் எதிர்காலத்தில் பல்வேறு விரும்பத்தகாத மனவெழுச்சிகளைத் தோற்றுவிக்கக் கூடும். ஏற்கனவே சாதியாலும் மதத்தாலும் இனத்தாலும் மொழியாலும் பொருளாதாரத்தாலும் பிளவுண்டு கிடக்கும் சமூகத்தில் புதிதாக தகவல் தொழில்நுட்பக் கருவிகளற்ற மக்குக்குடும்பம் என்கிற அறிவுப்பிளவு ஏழை, எளிய, அடித்தட்டு மக்களிடையேயும் அவர்தம் பிள்ளைகளிடையேயும் உருவாகி மேலும் சமூக விரிசலை மிகுதியாக்கும். இதுகுறித்து ஆட்சியில் உள்ளோர் சிந்திக்க வேண்டிய தருணமிது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அரைகுறையாக ஈடுபடுவதும் ஈடேற்றுவதும் உரிய உகந்த செயல் ஆகாது. பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை நிரப்புதல் போல் இயலாமையுடன் இல்லாமை இணைந்து தாழ்வு மனப்பான்மையைத் தாறுமாறாகத் தோற்றுவிக்கக் கூடும்.

இணைய வழி வகுப்புகளை சமுதாய வெளிகளில் பொதுமைப்படுத்திப் பரப்புரைகள் மேற்கொள்ளும் முன் பள்ளி வாரியாகவும் மாணவர்கள் வாரியாகவும் கணக்கெடுப்பு மேற்கொண்டு தீர்வு காண்பதே நல்லது. பேருக்கு அல்லாமல் விலையில்லா இணைய வசதிகள் உள்ளடக்கிய கல்வி சார்ந்த கைக்கணினியை (Tablet) அரசு மற்றும் அரசு நிதியுதவிப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் அவசர அவசியம் கருதி உடன் வழங்கிட மாநில அரசு முன்வரவேண்டும். தனியார் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவிகளைக் கோரியும் நிறைவேற்ற முனைவது அவசியம்.

நெடுநேரம் ஒளிரும் தொடுதிரையினை உற்றுப்பார்க்கும் குழந்தைகள், மருத்துவர்கள் மற்றும் உளவியல் நி
வல்லுநர்கள் எச்சரிக்கும் உடல், உளத் தீங்குகளிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ள இணைய வகுப்புகளுக்குக் குறிப்பிட்ட கால வரையறை மிகவும் முக்கியம். அனைத்துத் துறைகளிலும் கல்வி நிறுவனங்களிலும் இணைய வழிக் கல்வியானது எதிர்காலத்தில் தவிர்க்க முடியாததாகி விடும் சூழல் வெகுதொலைவில் இல்லை. அதற்கு தேவையான அடிப்படை வசதிகளைப் பள்ளிகள்தோறும் பெருக்குதல் இன்றியமையாதது. கூடவே, ஆசிரியர்களையும் இப்புதிய சூழலுக்கு ஏற்ப வளப்படுத்துவது என்பதும் தலையாயது ஆகும்.

கானல் நீரில் தாகம் தணித்துக் கொள்ள நினைப்பதும் முயல்வதும் ஏற்புடையதாக இருக்காது. இது அனைவருக்கும் பொருந்தும். அதுவரை இணைய வழிக்கல்வி அனைவருக்குமான கல்வியாக ஒருபோதும் இருக்க வாய்ப்பில்லை. முதலில் பாழடைந்த சுவர்களைச் சரிசெய்யுங்கள்! பிறகு எழில்மிகு சித்திரங்களை வரைவீர்!

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News