Join THAMIZHKADAL WhatsApp Groups
Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதில் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பான விதிமுறைகளை முதல்வரின் பரிந்துரைக்குப் பள்ளிக் கல்வித் துறை அனுப்பி வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. கல்வி மிகப்பெரிய வியாபாரமாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அரசுப் பள்ளிகளின் தரம் சரியில்லை என்பதாலும் ஆங்கிலவழிக் கல்விக்காகவும் பலரும் தனியார் பள்ளிகளை நாடுகின்றனர். அங்கு எவ்வளவு கட்டணம் வசூலித்தாலும் அது பற்றி புலம்பிக்கொண்டே கட்டுவது வழக்கமாக உள்ளது. கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த கோடை விடுமுறைக்கு முன்னதாகவே மூடப்பட்டது. எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பதே தெரியவில்லை. இந்தநிலையில் ஆன்லைன் வகுப்பு என்று கூறி ப்ரீகேஜி முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
9ம் வகுப்புக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் ஓரளவுக்கு நியமாகவே தெரிகிறது. இருந்தாலும் ஸ்மார்ட்போன் வசதி இல்லாத குழந்தைகள் இதனால் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். நாளை பள்ளி திறந்து தேர்வுகள் நடக்கும்போது ஆன்லைன் வகுப்பில் படித்த குழந்தைக்கும் ஸ்மார்ட் போன் இல்லாததால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்காத குழந்தைக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உருவாகும். ஸ்மார்ட் போன் வாங்க முடியாதது அந்த குழந்தையின் குற்றம் என்று கூற முடியாது. மேலும் ப்ரீகேஜி போன்ற மழலையர் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு எதற்கு ஆன்லைன் வகுப்புகள் என்ற கேள்வியும் எழுகிறது. ஆன்லைன் வகுப்பு என்று கூறி பெற்றோரிடமிருந்து பணம் பறிப்பதாக குற்றச்சாட்டும் உள்ளது. இப்படி ஆன்லைன் வகுப்பு நடத்தும் பள்ளிகளுக்கு அரசு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
இதன் அடிப்படையில் தமிழக பள்ளிக் கல்வித் துறை ஆன்லைன் வகுப்பு தொடர்பாக புதிய விதிமுறைகளை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விதிமுறைகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. அந்த பரிந்துரையில் மழலையர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்துவது சரியில்லை என்று கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது. கர்நாடகத்தில் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தக்கூடாது என்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல் மகாராஷ்டிராவிலும் மழலையர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Join THAMIZHKADAL WhatsApp Groups
No comments:
Post a Comment