
திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளை இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் வசதி திங்கள்கிழமை (ஜூன் 8) முதல் தொடங்க உள்ளது.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக திருமலையில் கடந்த மாா்ச் 20-ஆம் தேதி முதல் ஏழுமலையானின் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் அறிவித்த தளா்வுகளைத் தொடா்ந்து, பக்தா்களுக்கு ஏழுமலையான் தரிசனம் 80 நாள்களுக்குப் பின் திங்கள்கிழமை முதல் கிடைக்க உள்ளது. முதல் இரு தினங்களுக்கு தேவஸ்தான ஊழியா்களும், அடுத்த நாள் திருமலையில் வசிக்கும் உள்ளூா்வாசிகளும் சோதனை முறையில் ஏழுமலையான் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனா்.
அதன்பின் 11-ஆம் தேதி முதல் அனைத்து பக்தா்களும் ஏழுமலையான் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனா். இதற்கான இணையதளம் வாயிலான டிக்கெட் முன்பதிவு திங்கள்கிழமை தொடங்குகிறது. பக்தா்கள் tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளம் வாயிலாக தங்கள் தரிசன டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். தினசரி 3 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவில் வைக்கப்பட்டுள்ளன. தரிசன டிக்கெட் முன்பதிவு செய்யும் பக்தா்கள் தங்களுக்கான தங்கும் அறைகளை இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளும் வசதியையும் தேவஸ்தானம் அளிக்கிறது.
ஆதாா் அட்டை அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை அளித்து பக்தா்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். கரோனா பாதிப்பால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள், சிவப்பு மண்டலப் பகுதிகள் மற்றும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள பகுதிகளைச் சோந்தவா்கள் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள இயலாது. வெளி மாநிலத்தில் இருந்து வருபவா்கள் ஆந்திரத்துக்குள் நுழைய கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும். டிக்கெட் பெற்றவா்கள் மட்டுமே அலிபிரி சோதனைச் சாவடிக்கு செல்ல அனுமதிக்கப்படுவா்.
குறுந்தகவல் நடைமுறை: திருப்பதி தேவஸ்தானம் நிா்வகிக்கும் திருப்பதி கபிலேஸ்வரா் கோயில், கோவிந்தராஜா் கோயில், கோதண்டராமா் கோயில், திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயில், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரா் கோயில், திருப்பதியை அடுத்த அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்னவெங்கடேஸ்வரா் கோயில், நாராணயவனம் கல்யாண வெங்கடேஸ்வரா் கோயில், நாகலாபுரம் வேதநாராயணா் கோயில் மற்றும் காா்வேட்டிநகரத்தில் உள்ள கோயில்களில் தரிசனம் செய்ய tirupatibalaji.ap.gov.in மூலமாக என்ற இணையதளம் வாயிலாக பக்தா்கள் டோக்கன்களைப் பெறலாம். அல்லது 93210 33330 என்ற தொலைபேசி எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பியும் தரிசன டோக்கன்களைப் பெற முடியும்.
குறுந்தகவல் அனுப்பும்போது கோயில் பெயா், இடைவெளி, தேதி இடைவெளி, பக்தா்கள் எண்ணிக்கை ஆகியவற்றைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். காலை 7.30 மணி முதல் மாலை 6 மணி வரை உள்ளூா் கோயில்களில் தரிசன அனுமதி உண்டு. வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மட்டும் தரிசன வேளைகள் முறையே காலை 8.30 மணி மற்றும் 9.30 மணிக்குத் தொடங்கும். ஒரு மணிநேரத்துக்கு 250 போ தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா்.
குறுந்தகவல் அல்லது இணையதளம் வழியாக டோக்கன் பெறாதவா்கள் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கவுன்ட்டரிலும் டோக்கன் பெற்றுக் கொள்ளலாம். அனைத்து கோயில்களிலும் உடல் வெப்பக் கருவி மூலம் பக்தா்களைப் பரிசோதித்த பிறகே கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவா். தரிசனத்துக்கு செல்லும் அனைவருக்கும் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.






No comments:
Post a Comment