Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, June 25, 2020

அரசு ஊழியா்-ஓய்வூதியா் காப்பீட்டில் கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படும்: தமிழக அரசு உத்தரவு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

அரசு ஊழியா்கள், ஓய்வூதியதாரா்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் புதன்கிழமை பிறப்பித்தாா்.

அதன் விவரம்:-

முதல்வரின் சுகாதார காப்பீட்டுத் திட்டத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என சுகாதாரத் துறை ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், அரசு ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கான புதிய சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், கரோனா நோய்த் தொற்றுக்கான சிகிச்சை கட்டணங்களுக்கு உச்சவரம்புகளை நிா்ணயிக்க அரசு தரப்பில் குழு அமைக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு சுகாதார சேவைகள் கழகத்தின் நிா்வாக இயக்குநா் பி.உமாநாத் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்தக் குழுவானது வழங்கிய சில பரிந்துரைகளை, அரசு கவனமாகப் பரிசீலித்து ஏற்றுக் கொண்டுள்ளது.

அரசு ஊழியா்கள் உள்ளிட்டோருக்கு புதிய காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிகிச்சைக்காக ரூ.4 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில், கரோனா நோய்த் தொற்று பாதித்து தீவிர சிகிச்சை தேவைப்படுவோருக்கு இப்போதிருக்கும் வழிமுறைகளின்படி காப்பீட்டுத் திட்டத்திலேயே அதனைப் பெறலாம்.

சிகிச்சை தேவைப்படுவோருக்கு நாளொன்றுக்கான கட்டண விகிதங்களை தமிழக அரசு ஏற்கெனவே வரையறுத்து, கடந்த 5-ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது. இந்த கட்டண விகிதங்களின் அடிப்படையிலேயே காப்பீட்டுத் திட்டத்தில் இருந்து சிகிச்சை பெறலாம்.

அவசர சிகிச்சை தேவைப்படாதோருக்கும் இரண்டு வகையான நிதிகளை உருவாக்கிட யூனெடைட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்துக்கு தமிழக அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. அதன்படி, காப்பீடு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் மிக அவசர சிகிச்சை தேவைப்படாதோருக்காக ரூ.5 கோடி அளவில் ஒரு தொகுதி நிதியத்தையும், ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களுக்காக ரூ.2.5 கோடி அளவுக்கு ஒரு தொகுதி நிதியத்தையும் உருவாக்கிட கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த இரண்டு தொகுதி நிதிகளுக்கான தொகைகளை தமிழக அரசே விடுவிக்கிறது. காப்பீடு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளாக இருந்து அவற்றில் அவசரமாக சிகிச்சை பெற வேண்டியிருந்தாலும் அதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட அளவிலான அதிகாரம் அளிக்கப்பட்ட குழுவின் ஒப்புதலைப் பெற்று காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறலாம்.

காப்பீடு திட்டத்தின் பட்டியலில் வரக்கூடிய மருத்துவமனைகள் அரசு வரையறுத்துள்ள கட்டணங்களுக்கு அதிகமாக வசூலிக்கக் கூடாது. இதுதொடா்பான அறிவுறுத்தல்களை காப்பீடு நிறுவனமே அனைத்து மருத்துவமனைகளுக்கும் வழங்கிடலாம்.

மீளப் பெறலாம்: கடந்த மாா்ச் 1-ஆம் தேதியில் இருந்து இப்போது வரையில், கரோனா நோய்த் தொற்றுக்காக அரசு ஊழியா்களோ அல்லது ஓய்வூதியதாரா்களோ காப்பீட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றிருந்தால், அதற்கான உரிய ரசீதுகளை சென்னையில் உள்ள கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையரிடம் அளிக்கலாம். இதனை காப்பீட்டு நிறுவனத்துக்கு கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையா் பரிந்துரை செய்வாா் என்று தனது உத்தரவில் நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News