Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, July 9, 2020

ஜூலை 13ம் தேதி முதல் ஸ்கூல்! 'டிவி' மூலம் ஒளிபரப்பு; 'ஆன்லைனில்' வகுப்பு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

சென்னை: ''அரசு பள்ளி மாணவர்களுக்கு, வரும், 13ம் தேதி முதல் பாடப் புத்தகங்கள் வழங்கப்படும்; ஐந்து, 'டிவி' சேனல்கள் வழியாக, 'ஆன்லைன்' வழி பாடங்கள் நடத்தப்படும்,'' என, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். தற்போதைக்கு பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை என்பதால், தனியார் பள்ளி நிர்வாகங்களை தொடர்ந்து, தமிழக அரசும், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில், கொரோனா பரவல் தடுப்புக்கான ஊரடங்கு, வரும், 31ம் தேதி வரை அமலில் உள்ளது. மாவட்டத்திற்குள் மட்டுமே, மக்கள் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. பஸ், ரயில் போக்குவரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பள்ளி, கல்லுாரிகளை வரும், 31ம் தேதி வரை திறக்க வேண்டாம் என, அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை, விதிகளுக்கு உட்பட்டு நடத்தலாம் என, அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இந்த அனுமதியின்படி, தனியார் பள்ளிகள், தங்கள் மாணவர்களுக்கு, ஆன்லைன் வாயிலாக வகுப்புகளை நடத்தி வருகின்றன. இந்த நடைமுறையை, அரசு பள்ளிகளிலும் பின்பற்ற வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தி வந்தனர்.ஆன்லைன் வகுப்பு:இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கும், ஆன்லைன் வழி கல்வியை நடத்த, தமிழக பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இந்த வகுப்புகள், 13ம் தேதி முதல் துவங்க உள்ளன.

ஈரோடு மாவட்டம், நம்பியூர் ஒன்றியத்தில், பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டும் பணியை, நேற்று துவக்கி வைத்த, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன், ஆன்லைன் வகுப்பு துவக்கம் குறித்த அறிவிப்பை வெளியிடடார்.பின் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில், ஒன்று முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, வரும், 13ம் தேதி முதல், பாடப் புத்தகங்கள் வழங்கப்படும்.
இதற்கான நிகழ்ச்சியை, முதல்வர் துவக்கி வைப்பார்.ஒவ்வொரு மாவட்டத்திலும், பள்ளி வாரியாக, மாணவர்களுக்கு, பாடப் புத்தகங்கள் வழங்கப்படும். இந்த பாடப் புத்தகங்களும், பாடத் திட்டமும், இந்தியாவிலேயே இல்லாத வகையில், மற்ற மாநிலங்களுக்கு மாதிரி திட்டமாக அமையும்.மேலும், அரசு மற்றும் அரசு உதவி பள்ளி மாணவர்களுக்கு, வரும், 13ம் தேதிக்கு மேல், 'யு டியூப்' மற்றும் 'டிவி'யை பயன்படுத்தி, ஐந்து சேனல்கள் வழியே, அனைத்து வகுப்புகளுக்கும் பாடங்கள் நடத்தப்பட உள்ளன; அதற்கேற்ப கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.10ம் வகுப்பு தேர்ச்சி:பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, தேர்ச்சி அளிக்கும் வகையில், காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளன. இதில், ஆண்டு முழுவதுமாக பள்ளிக்கு வராதவர்கள், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா, ஐந்து முதல் ஆறு பேர் வரை உள்ளனர்.

இந்த விபரங்களை பட்டியலிட்டு, கல்வியாளர்களுடன் கலந்து பேசி, முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று, முடிவு வெளியிடப்படும்.மார்ச், 24ல் நடக்கவிருந்த பிளஸ் 2 தேர்வில், 34 ஆயிரம் தேர்வர்கள் பங்கேற்கவில்லை; அவர்களில், 718 பேர் மட்டுமே தேர்வை எழுத விருப்பம் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு, செங்கோட்டையன் கூறினார்.நேர கட்டுப்பாடு தேவை:தனியார் பள்ளிகளில், இரண்டு மணி நேரத்துக்கு மேல் ஆன்லைன் வகுப்பு நடத்துவதால், மாணவர்களுக்கு கண் பார்வையில் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு, மருத்துவ நிபுணர்கள் வழியே, உரிய வழிகாட்டுதலை பெற வேண்டும். தமிழகத்தில் செயல்படும், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில், ஐந்து மணி நேரம் வரை, ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுகிறது. இதற்கு, பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த பள்ளிகளில், தமிழக மாணவர்கள் அதிகம் படிக்கின்றனர். அவர்களின் நலன் கருதி, கேந்திரிய வித்யாலயா பள்ளியின் ஆன்லைன் வகுப்பு நேரத்துக்கு, தமிழக அரசு கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வரும், 27ல் மறுதேர்வு; ஆக., 1ல் பிளஸ் 2, 'ரிசல்ட்?'இதுகுறித்து, அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச்சில் நடத்தி முடிக்கப்பட்டது. மார்ச், 24ல் நடத்தப்பட்ட, இறுதி நாள் பொது தேர்வை, சில மாணவர்கள் எழுத முடியாத சூழல் ஏற்பட்டதாக, பெற்றோர் மற்றும் மாணவர்கள் தெரிவித்தனர். அவர்களுக்காக, வரும், 27ம் தேதி மறுதேர்வு நடத்தப்படும்.மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலேயே, தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.

இதற்கான, 'ஹால் டிக்கெட்'டுகளை, 13ம் தேதி முதல், 17 வரை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். தனித்தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு சென்று, ஹால் டிக்கெட் பெறலாம்.
தேர்வு மையங்களுக்கு செல்ல, மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி செய்யப்படும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், தேர்வு மையம் அமைக்கப்படாது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு, தேர்வு எழுத தனி அறை ஒதுக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. 'ரிசல்ட்' எப்போது?பிளஸ் 2வில் விடுபட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு முடிந்த, மூன்று நாட்களில், 'ரிசல்ட்' வெளியிடப்படும் என, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். அதனால், 27ல் மறுதேர்வு முடிந்ததும், ஆக.,1க்குள் ரிசல்ட் வெளியாக வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News