Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, July 7, 2020

பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவதில் ஏன் தயக்கம்? தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு கேள்வி


ஜனார்த்தனன்

பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவதில் ஏன் தயக்கம் என்ற கேள்வியை தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு எழுப்பியுள்ளது.

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறைச் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் எஸ். தமிழ்ச்செல்வி, என். ஜனார்த்தனன் ஆகியோர் இது பற்றி கூறுகையில்…, “ஓய்வூதியம் (பென்சன்) என்பது தானமோ, தர்மமோ அல்லது விருப்பப்பட்டு வழங்கப்படும் வெகுமதியோ அல்ல.

கடந்த 1948 டிசம்பர் 10-ம் தேதி ஐ.நா.சபையால் வெளியிடப்பட்டு, இந்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிற மனித உரிமைப் பிரகடனத்தின் பிரிவு 24 (1) மற்றும் பிரிவு 25 ” ன் படி., ” ஓய்வூதியம் ” ஓர் அடிப்படை உரிமையாகும். அது மட்டுமல்லாமல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 309 மற்றும் 148 பிரிவு (5) ஆகியவற்றின் படியும்., சட்டப் பிரிவு 31 (1), பிரிவு 19 (1), (F) ஆகியவற்றின் படியும் ., ஒய்வூதியம் என்பது ஒவ்வொரு ஊழியரின் சொத்துரிமை ஆகும் எனவும்., மேலும்.. அது., அவர்களது பணிக் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட கொடுபடா ஊதியமே எனவும். அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் தம் பணிக் காலத்தில் இருந்த அதே கண்ணியத்தோடும்., தன்மானத்தோடும்.. அவர்கள் ஓய்வு பெற்ற பின்பும் வாழ வழி வகை செய்திட வழங்கப்படுவது தான் ஓய்வூதியம் ” என்றும்., உச்ச நீதிமன்றம், ஓய்வூதியம்… தொடர்பான பல வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ்செல்வி

உண்மை என்ன?

பொதுவாக. ஓய்வூதியம் வழங்குவதால்.. அரசின் ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும் பெரும் தொகை ஓய்வூதியத்திற்காக செலவு செய்யப்படுவதாகவும்.. இதனால் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற நிதிப் பற்றாக்குறை ஏற்படுவதாகவும்.. ஆட்சியாளர்களால் தவறாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால்… உண்மை அதுவல்ல. உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டதைப் போல் ” ஓய்வூதியம் ” என்பது கொடுபடாஊதியமே.! தொழிலாளர் நலச்சட்டங்களின்படி., தொழிலாளிகளுக்கு வழங்க வேண்டிய வருங்கால வைப்பு நிதிக்கு அரசு செலுத்தும் பங்குத் தொகையைப் போல்.. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கென்று அரசு, கொடுபடா ஊதியத் தொகையினை ஓய்வூதிய நிதித் தொகுப்பில் அவ்வப்போது செலுத்த வேண்டும் என்பதே ஓய்வூதியச் சட்டத்தின் முக்கியமான அம்சமாகும்.

அவ்வாறு செலுத்தியிருந்தால், வருடாந்திர வரவு செலவு திட்டத்தில் ஓய்வூதியத்திற்கென்று நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய தேவையே இருந்திருக்காது. மாறாக, அரசு அந்த கொடுபடா ஊதியத் தொகையினை வேறு பல செலவுகளுக்கு மடைமாற்றம் செய்ததன் விளைவே இன்றைய நிதி நெருக்கடிகளுக்கு அடிப்படைக் காரணமாகும். அரசின் கருவூலத்திலிருந்து., எவ்வளவுக்கெவ்வளவு அதிகமான நிதி, ஊழியர்களின்., ஆசிரியர்களின்., தொழிலாளர்களின் ஊதியமாக., முதியவர்களுக்கு ஓய்வூதியமாக பகிர்ந்தளிக்கப்படுகிறதோ., அவ்வளவுக்கவ்வளவு நுகர்வு அதிகரிக்கும்., அதன் விளைவாக உற்பத்தியும் அதிகரிக்கும்., தொழில் மந்தம் நீங்கி வேலையின்மை மறையும். நாட்டின் பொருளாதார நெருக்கடி சீர்பட்டு நாடு சுபிட்சமடையும். மக்கள் வாழ்வு மலரும்.

முதலாளிகள் தங்கத்தில் முதலீடு

ஆனால்.., அரசு இப்போதைய கொரோனா தொற்று நெருக்கடியிலும்கூட என்ன செய்து கொண்டிருக்கிறது..? பல லட்சம் கோடிகளை பெரு நிறுவனங்கள்.. தொழில் மந்தத்திலிருந்து மீள்வதற்கான “மீட்பு நிதியாக”, கடனாகவோ, மான்யமாகவோ கொடுத்துக் கொண்டிருக்கிறது. அந்த கார்ப்பரேட் நிறுவன முதலாளிகள் இந்த பல்லாயிரம் கோடி நிதியை வாங்கி என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்.?

அவர்கள், அந்நிதியை தங்களது தொழில்களில் முதலீடு செய்யவில்லை…!மாறாக., தங்கத்தில் முதலீடு செய்து கொண்டிருக்கிறார்கள்., எனவே தான் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.! ஏன்.? தொழில்களில் முதலீடு செய்யாமல் தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள். உலகம் முழுவதும் உழைப்பாளிகளுக்கு சரியான ஊதியம் இல்லை. எனவே நுகர்வு இல்லை. நுகர்வு இல்லாததால் உற்பத்தி செய்த பொருள்கள் நகர்வு இன்றி முடங்கிக் கிடக்கின்றன. எனவே ஆலைகள் இயக்கமின்றி முடங்கிக் கிடக்கின்றன.

ஆகவே முடங்கிக் கிடக்கிற தொழில்களில் முதலீடு செய்வதற்கு பதிலாக முதலாளிகள் தங்களுக்குக் கிடைத்த அந்த நிதியை தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள். எனவே, அரசு பொருளாதார மீட்சிக்காக எடுக்கும் எந்த நடவடிக்கையும் பலனைத் தருவதில்லை. எனவே, ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், தொழிலாளிகளுக்கும் வழங்கப்படும் சம்பள உயர்வும், முதியவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியமும் அரசுக்கு ஏற்படும் செலவினம் அல்ல..,

ஜெயலலிதா அறிவிப்பு

அவை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான முதலீடு…! அவ்வாறான சம்பளச் செலவினம் எவ்வளவுக்கெவ்வளவு அதிகரிக்கிறதோ., அவ்வளவுக்கவ்வளவு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். இந்த அடிப்படை உண்மைகளை ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியதும்., சாமான்ய மக்களை…அரசுக் கருவூலத்திலிருந்து ஊதியம் பெறுபவர்களுக்கு எதிராக திருப்பிவிடும் அரசின் தவறான செயல்கள் கைவிடப்பட்டு., மக்கள் உண்மை நிலையினை உணர்ந்து கொள்ளச் செய்ய வேண்டியதும்.. இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.

உண்மை நிலை இதுவாக இருக்க., அரசு ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதால் அரசுக்கு கூடுதல் செலவினம் ஏற்படுகிறது என்பது ஏற்புடையதல்ல. இந்த உண்மைகளை உணர்ந்ததால் தான்… கடந்த 2011-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில்., நாங்கள் (அ தி மு க ) ஆட்சிக்கு வந்தால்., புதிய ஒய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஒய்வூதியத் திட்டம் கொண்டு வரப்படும் என்று… மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அறிவித்தார்.

தேர்தல் வாக்குறுதி

அதன் பின் தமிழக சட்டமன்றத்தில் 19.2.2016-ல் சட்டமன்ற விதி 110 ன் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முன்னாள் முதல்வர், ” புதிய ஒய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன., எனவே, புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக ஆராய்ந்திட வல்லுனர் குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்கள்.

அதனைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. வின் தேர்தல் வாக்குறுதியில் புதிய ஒய்வூதிய திட்டம் ரத்து செய்யப்படும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். மேலும், நாடாளுமன்றத்தில் புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது அதற்கு எதிராக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை விவாதிக்கச் செய்தார்.

அத்தோடு 12.9.13 அன்று அந்த மசோதா தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடத்த வாக்கெடுப்பில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை அதனை எதிர்த்து வாக்களிக்க வழிகாட்டி அவ்வாறே செய்ய வைத்தார் என்பதையும் நினைவு கூற விரும்புகிறோம். பங்களிப்பு ஒய்வூதியச் சட்டத்தின்படி மாநில அரசுகள் ஒய்வூதிய ஒழுங்கு முறை ஆணையத்துடன் ஆன புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் .

பழைய பென்சன் திட்டம்

ஆனால்.,” ஒய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி ஆணையத்துடன் ” (PFRDA) எந்த ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் தமிழக அரசு இன்று வரை கையெழுத்திடவில்லை. இதனால் தமிழக அரசு தற்போது அமல்படுத்தி வரும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்கு சட்டரீதியான அங்கீகாரம் எதுவும் இல்லை என்பதையும்., பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது கட்டாயமல்ல என்றும்.. அது., அந்தந்த மாநில அரசுகளின் விருப்புரிமை சார்ந்தது எனவும், அம்மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவேதான்., பல மாநில அரசுகள் இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தை தற்போதும் அமலாக்க வில்லை. இந்த புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்., இந்திய அரசியலமைப்புச் சட்டம், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சாசனம் மற்றும் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் ஆகியவற்றின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிரானதாகும்.

எனவே, மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அளித்த தேர்தல் கால வாக்குறுதியின்படி., புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை முற்றாக ரத்து செய்துவிட்டு ஏற்கனவே நடைமுறையில் உள்ள ” பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்திட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

முதல்வருக்கு கோரிக்கை

புதிய பென்சன் திட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகை சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாயும், அதற்கு அரசின் பங்களிப்பாக சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாயும் என ஒரே நேரத்தில் 60 ஆயிரம் கோடி ரூபாயை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று ஆணையத்திற்கு அரசு வழங்கினால் மட்டுமே புதிய பென்சன் திட்டத்தில் சேர முடியும். ஆனால் பழைய பென்சன் திட்டத்தால் அரசுக்கு இதுபோன்ற செலவினங்கள் ஏற்படாது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்வதாக கொள்கை அளவில் முடிவெடுத்து அதை சட்டவடிவமாக்க வல்லுநர் குழுவை ஏற்படுத்தியிருந்தார். ஆனால் அதற்குள் அவர் மறைந்துவிட்டதால் தற்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment