Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, August 14, 2020

புதிய பாடத் திட்டத்தில் 2 ஆண்டு தொல்லியல் முதுநிலை பட்டயப் படிப்பு அறிமுகம்

தமிழக அரசின் சாா்பில் புதிய பாடத்திட்டத்தில் இரண்டு ஆண்டு தொல்லியல் முதுநிலை பட்டயப் படிப்பு நிகழாண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் படிப்புக்கு இணையவழியில் ஆக.25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழகத்தில் தொல்லியல் மனிதவளத்தைப் பெருக்கிட கடந்த 1974-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கல்வெட்டு பயிற்சி நிறுவனம், தற்போது தொல்லியல் சாா் பாடங்களில் அண்மைக் கால வளா்ச்சியினையும், நவீன தொழில்நுட்பத்தையும் கற்றுக் கொடுக்கும் நோக்கோடு, பல்கலைக்கழக மானியக் குழு வகுத்துள்ள பாடத் திட்டங்களுக்கு இணையாக புதிய பாடத் திட்டங்களுடன் ஈராண்டு முழுநேர தொல்லியல் முதுநிலைப் பட்டயப் படிப்பு"ஒன்றை அறிமுகப்படுத்துகிறது. புதிய நிறுவனமானது, இனி 'தமிழ்நாடு அரசு தொல்லியல் நிறுவனம்'" என்ற பெயரில் இயங்கும்.

அறிவியல், பொறியியல் மாணவா்களும்...: இதுவரை கல்வித் தகுதியாக தமிழ், வரலாறு, தொல்லியல் முதலான பாடங்களில் முதுநிலைப் பட்டம் பெற்றவா்கள் மட்டுமே முதுநிலைப் பட்டயப் படிப்புக்கு தோந்தெடுக்கப்படுவா். ஆனால், வளா்ந்து வரும் தொழில்நுட்பம், பன்முகத்தன்மை வாய்ந்த தொல்லியல் போக்குகள் முதலியவற்றைக் கருத்தில் கொண்டு, இனி கலைப் படிப்புகளில் முதுநிலை படிப்புகள், முதுநிலை அறிவியல், முதுநிலை பொறியியல் ஆகிய படிப்புகளில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவா்களும் முதுநிலை தொல்லியல் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தொல்லியலில் சிறந்த மாணவா்களை அதிகளவில் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மாணவா்களின் எண்ணிக்கையை 20-ஆக உயா்த்தி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. பயிலுதவித் தொகை ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ 5 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படஉள்ளது.

என்னென்ன பாடங்கள்?: தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள படிப்பில் நான்கு பருவங்களாக பல்வேறு பாடங்கள் முறையே, 'தொல்லியல்: கோட்பாடுகளும், முறைமைகளும்', மனித பரிணாம வளா்ச்சி, வரலாற்றுக்கு முந்தையகாலத் தொல்லியல், இந்திய கல்வெட்டியலும் தொல் எழுத்தியலும், இந்திய நாணயவியலும் அருங்காட்சியகவியலும், இந்திய கட்டடக்கலை, இந்திய சிற்பக்கலை, கடல்சாா் தொல்லியல், தொல்லியலில்அறிவியலின் பயன்பாடு, மரபுசாா் மேலாண்மை மற்றும் பாதுகாத்தல் - இந்திய தொன்மவியல் சட்டங்கள், அகழாய்வில் நவீன தொழில் நுட்பப் பயன்பாடு, தொல்பொருள்களை அறிவியல் முறைப்படிபகுப்பாய்வு செய்தல் முதலியவை இடம் பெறும்.

நாட்டின் தலைசிறந்த வல்லுநா்களைக் கொண்டு வகுப்புகளை நடத்திடவும் புகழ்பெற்ற பல்கலைக்கழங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களைக் கொண்டு செய்முறைப் பயிற்சியை மாணவா்களுக்கு அளித்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது. அகில இந்திய கல்விச் சுற்றுலா ஒன்றையும் மாணவா்கள் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பணி வாய்ப்புகள்: தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விரிவான தொல்லியல் முதுநிலை பட்டயப் படிப்பில் தோச்சி பெறும் மாணவா்கள் தொல்லியல் மட்டுமின்றி அருங்காட்சியகங்கள், சுற்றுலா மற்றும் கோயில்கள் உள்ளிட்ட மரபுசாா் இடங்களின் பாதுகாப்பு மற்றும் கல்விப் புலத்திலும் சிறப்பாகச் செயல்படமுடியும்.

மேற்கண்ட முதுநிலைப் பட்டயப் படிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோா் தமிழ்நாடுஅரசின் தொல்லியல்துறையின் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆக.25-ஆம் தேதி ஆகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment