Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, August 11, 2020

உடல் எடையை குறைக்க உதவும் ஆரோக்கிய பானம்!



சிலர் உடல் எடையைக் குறைக்க பல்வேறு விதமான உணவுக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவார்கள். ஆனால், சமயத்தில் நல்ல ருசியான உணவைப் பார்க்கும் போது, அவர்கள் பின்பற்றிய கட்டுபாடுகள் அனைத்தும் காணாமல் போய்விடும். அதுநாள் வரையில் கடைப்பிடித்திருந்த டயட் மொத்தமும் பீட்சா, பர்கரை போன்றவற்றைச் சாப்பிட்டு வீணாகிவிடும்.

எனவே, ஆரோக்கியமானவற்றை மட்டும் உணவில் சேர்க்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் போது, அதற்கு ஏற்றவாறு உணவுத் திட்டமும் தேவை. துரித உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள், அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள் போன்றவைகளைக் கைவிட வேண்டும்.

உடல் எடையைக் குறைக்க வேண்டுமென்றால் இதுபோன்ற கடினமான முடிவுகளையும் எடுக்க வேண்டும். இவை கடினமாக இருந்தாலும், அவ்வாறு உணவுக்கட்டுப்பாடுகளைப் பின்பற்றும் போதுதான் அதன் மதிப்பு உங்களுக்குப் புரியும்.

ஆனால், இதற்கு மத்தியிலும் சில உணவு வகைகள் உள்ளன. அவை நாவிற்குச் சுவையாகவும், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் சக்தியும் உண்டு. அவற்றில் ஒன்றுதான் ஸ்மூத்தி. பல்வேறு வகையான ஸ்மூத்திகள் உள்ளன. அவற்றில் ஆரோக்கியம் மிகுந்த உணவுப்பொருட்கள், பழங்கள் சேர்க்கப்பட்ட ஸ்மூத்திகளைத் தேர்வு செய்து சாப்பிடலாம்.

அந்தவகையில் புரோட்டீன் மிகுந்த ஸ்மூத்தி ஒரு நல்ல ருசியான, ஆரோக்கியமான உணவாகும். இதற்குப் பெரிய அளவிலான மூலப்பொருட்கள் தேவையில்லை. மேலும், இந்த ஸ்மூத்தியைச் செய்வதற்கு வெறும் 2 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

ஆளி விதை (Flaxseed) என்பது புரோட்டீன் நிறைந்ததாகும். 100 கிராம் ஆளிவிதையில் 18 கிராம் அளவு புரோட்டீன் உள்ளது. இது ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ஃபைபர் உள்ளிட்ட சத்துக்களையும் கொண்டுள்ளது.

இதேப் போல், வால்நட்டிலும் புரோட்டீன் சத்து மிகுந்து காணப்படுகிறது. இதிலும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. மேலும், ஆண்டி ஆக்ஸிடன்டுகளும் உள்ளது. இது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

தேவையான பொருட்கள்:

வாழைப்பழம் - 2

சிறய துண்டுகளாக வெட்டப்பட்ட வால்நட் - 1/4 கப்

ஆளி விதைகள் - 2 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து மென்மையாக அரைக்க வேண்டும். இனிப்புச்சுவைக்கு சிறிது தேன் சேர்த்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால் ஓரிரு டீஸ்பூன் ஓட்ஸ் சேர்த்துக் கொள்ளலாம்.

அவ்வளவுதான். ஆரோக்கியமான, சுவையான புரதச்சத்து மிக்க ஸ்மூத்தி ரெடி. இதில் புரோட்டீன் சத்து மிகுந்து காணப்படுவதால், தசை நரம்புகளுக்கு நல்லது. கொழுப்பு குறைவதற்கு உதவுகிறது. இந்த ஸ்மூத்தியை வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கும், குழந்தைகளுக்கும் கூட கொடுக்கலாம்.

No comments:

Post a Comment