Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, August 2, 2020

புதியகல்வி கொள்கை :நாளை தமிழகம் முடிவு செய்கிறது!


புதிய கல்வி கொள்கையை செயல்படுத்துவதில், தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து, முதல்வர் இ.பி.எஸ்.,சுடன், அமைச்சர் செங்கோட்டையன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

நாடு முழுவதும் ஒரே தரம்; ஒரே கல்வி என்ற அடிப்படையில், புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த கல்வி கொள்கையில், பல்வேறு நிறை, குறைகள் உள்ளதால், பாராட்டுக்களும், விமர்சனங்களும் உள்ளன.சில மாநிலங்கள், புதிய கல்வி கொள்கையை கடுமையாக எதிர்த்துள்ளன; சில மாநிலங்கள் பாராட்டு தெரிவித்துள்ளன. தமிழகத்திலும், அரசியல் கட்சிகள் மத்தியில், பாராட்டும், எதிர்ப்பும் உள்ளது.இந்நிலையில், புதிய கல்வி கொள்கையை, தமிழகத்தில் அமல்படுத்துவது தொடர்பாக, முதல்வர் இ.பி.எஸ்., தலைமையில், நாளை ஆலோசனை நடத்தப்படுகிறது.

தமிழகத்தின் மொழி கொள்கை, கலாசாரம், பன்முக தன்மை பாதிக்காத வகையில், எந்தெந்த அம்சங்களை மட்டும், புதிய கல்வி கொள்கையில் ஏற்றுக் கொள்ளலாம் என்பது குறித்து, விரிவானஅறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையனுடன், செயலர் தீரஜ்குமார், கமிஷனர் சிஜி தாமஸ் வைத்யன், இயக்குனர்கள் கண்ணப்பன், பழனிசாமி, கருப்பசாமி மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

தமிழகத்தில் ஆன்லைன் கல்வியை அமல்படுத்துவது, தனியார், 'டிவி'க்கள் வாயிலாக, வீடியோ பாடங்கள் நடத்துவது, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடுவது உள்ளிட்டவை குறித்தும், அதிகாரிகளுடன், பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்த உள்ளார்.இதையடுத்து, பள்ளி கல்வி துறையின் நிலைப்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து, முக்கிய முடிவுகளை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட உள்ளதாக, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment