Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, August 11, 2020

மலச் சிக்கல், குடற்புண், அஜீரணம் சித்தர்கள் போற்றிய கடுக்காய்




கடுக்காய், மிக அற்புதமான ஒரு மூலிகை உணவு. மிக மலிவான விலையில் சூப்பர் மார்க்கெட்களிலும், நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும் கடுக்காயின் பலன்கள் எண்ணற்றவை! 'காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய்' என உடல் நலத்திற்கு இலக்கணம் வகுத்திருக்கிறார்கள் முன்னோர்கள்.

கடுக்காயை வாங்கி, அதை உடைத்து கடினமான தோல் பகுதியை மட்டும் நாம் எடுத்துக் கொள்ளவேண்டும். தோல் பகுதி மட்டுமே உணவாகவோ, மருந்தாகவோ எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய பகுதி. உள்ளே இருக்கும் கடுக்காய் கொட்டையை கவனமாக அப்புறப்படுத்த வேண்டும். அது விஷத் தன்மை உடையது. அதை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது.

பிரித்தெடுத்த கடுக்காய் தோடு பகுதியை சிறு துண்டுகளாக்கி, மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளலாம். அதை சலித்து எடுத்தால், பழுப்பும் மஞ்சளுமான கடுக்காய் பவுடர் கிடைக்கும். இதன் மருத்துவ பலன்கள் அனேகம்!

கடுக்காய் பயன்கள்

கடுக்காய் பொடி, வாய், தொண்டை, இரைப்பை, குடலில் உள்ள புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. மலச்சிக்கலைப் போக்கி குடல் சக்தியை ஊக்கப்படுத்தும் வல்லமை இதற்கு உண்டு. வயிற்றுப் பசியைத் தூண்டும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். வாத, பித்த, கபம் ஆகியவற்றால் வரும் பல்வேறு நோய்களையும் குணப்படுத்தும்.

இரவு உணவுக்குப் பிறகு, அரை டீ ஸ்பூன் கடுக்காய் பொடியைத் வாயில் போட்டு, ஒரு டம்ளர் நீரைக் குடித்துவர உடல் வலுவாகும். வாதம் குணமாகும். கடுக்காய் பொடியை தண்ணீரில் கரைத்தும் குடிக்கலாம். அதேபோல் கடுக்காய் தோலை லேசாக வறுத்தெடுத்து, கற்கண்டுடன் சேர்த்து லேகியம் போல செய்து தினமும் இரவு தூங்குவதற்கு முன்பாக சாப்பிட்டு வந்தாலும் வாத நோய் தீரும்.

3 கடுக்காய்களைத் தோல் எடுத்து, தேவையான அளவு இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம் பருப்பு சேர்த்து இவற்றை ஒன்றாக நெய்யில் வதக்கி உப்பு சேர்த்து துவையலாக அரைத்துக் கொள்ளலா, பின்னர் சுட சுட சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வந்தால் ஜீரணசக்தி கூடும். அஜீரணக் கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல் பிரச்சினை தீரும். உடல் பலம் பெறும்.

கடுக்காய்த் தூளை 10 கிராம் எடுத்து, அதே அளவு சுக்குத்தூள், திப்பிலித்தூள் எடுத்து கலந்து கொண்டு காலை, மாலை அரை ஸ்பூன் வீதம், 21 நாட்கள் சாப்பிட்டால் வாதவலி, பித்த நோய்கள் குணமாகும்.

திரிபலா எனும் மருந்தை 48 நாட்கள் தொடர்ந்து பாலிலோ வெந்நீரிலோ சாப்பிட்டு வந்தால், நரை, திரை, மூப்பு இன்றி இளமையாக வாழ முடியும் என சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது. கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இதன் பொடிகளைச் சேர்த்து திரிபலா தயார் செய்கிறார்கள். இப்படியாக கடுக்காயின் பலன்கள் அளவற்றதும், விலை மதிக்க முடியாதவையும் ஆகும்.

No comments:

Post a Comment