Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, September 8, 2020

அரியர் மாணவர்களுக்கு ஆல் பாஸ் உறுதி அமைச்சர் அன்பழகன் திட்டவட்டம்

கொரோனா ஊரடங்கால், பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு தவிர, மற்ற மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, 'ஆல் பாஸ்' வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அரியர் வைத்திருந்த மாணவர்கள், தேர்வுக்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியிருந்தால், அவர்களும், 'ஆல் பாஸ்' செய்யப்படுவர் என, அறிவிக்கப்பட்டது.இந்த விவகாரம், கல்வியாளர்கள் மத்தியில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த முடிவுக்கு, அண்ணா பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.'அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் வழிகாட்டுதல்படி, அரியர் வைத்திருந்த மாணவர்களுக்கு தேர்வு இன்றி தேர்ச்சி வழங்க முடியாது.

இதுகுறித்து, ஏ.ஐ.சி.டி.இ.,யில் இருந்து, இ - மெயில் வந்துள்ளது' என, சுரப்பா தெரிவித்தார். இதனால், அரியர் பாடங்களுக்கு தேர்ச்சி உண்டா, இல்லையா என்ற குழப்பம் நிலவியது.

இந்நிலையில், சென்னையில் உள்ள பாலிடெக்னிக் கல்லுாரியில், நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் கூறியதாவது:ஊரடங்கால், தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட அரியர் மாணவர்களுக்கு, அவர்கள் கட்டணம் செலுத்தியிருந்தால் தேர்ச்சி வழங்கப்படும் என்ற உத்தரவில், மாற்றம் ஏதும் இல்லை.

ஏ.ஐ.சி.டி.இ.,யிடம் இருந்து, எந்த விதமான, இ - மெயிலும் வரவில்லை. பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி.,யின் வழிகாட்டுதல்படியே, 'ஆல் பாஸ்' வழங்கப்பட்டுள்ளது. எனவே, அதில் மாற்றம் ஏதும் இல்லை.இவ்வாறு, அன்பழகன் கூறினார்.

இதற்கிடையில், 'சென்னை பல்கலை மற்றும் அதன் இணைப்பில் உள்ள கல்லுாரிகளில் படித்து, அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்து, கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு, அரசின் அறிவிப்புப்படி, ஆல்பாஸ் வழங்கப்படும்' என, துணைவேந்தர் கவுரி அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment