Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, October 9, 2020

ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு கோரிய வழக்கு! -பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் சம வாய்ப்பு, உரிமைகள் பாதுகாப்பு மற்றும் முழு பங்களிப்பு சட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிட வகை செய்துள்ளது. 

ஆனால், தமிழகத்தில் உள்ள 22 பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக்கூறி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பாரதியார் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் வெங்கடேசன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், பாரதியார், பெரியார், வேளாண் பல்கலைக்கழகம் உள்பட எட்டு பல்கலைக்கழகங்களிடம் இருந்து, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி, 106 பேராசிரியர் பணியிடங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்தப் பல்கலைக்கழகங்களில், 29 இடங்கள் மட்டுமே மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

அதுபோல், தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் 2,398 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை, மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால், 20 பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களில், மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உத்தரவிட வேண்டும். 1996- ஆம் ஆண்டு முதல், காலியாக உள்ள இடங்களைக் கண்டறிந்து நிரப்ப உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, நவம்பர் 27- ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக உயர் கல்வித் துறை செயலாளருக்கும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளருக்கும், கல்லூரிக் கல்வி இயக்குனருக்கும், மாநில மாற்றுத் திறனாளிகள் நல ஆணையருக்கும் உத்தரவிட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்க, மனுதாரருக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment