Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, October 21, 2020

7.5% உள் ஒதுக்கீடு சட்ட மசோதா ஒப்புதல் விவகாரம்: ஆளுநருடன் 5 அமைச்சர்கள் சந்திப்பு .

நீட் தேர்வு எழுதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு சட்டம் இயற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. ஆளுநர் காலதாமதம் செய்வதால் அவரை நேரில் சந்தித்து வலியுறுத்த 5 பேர் கொண்ட அமைச்சர்கள் குழு இன்று காலை ஆளுநரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசி வருகிறது.

தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்கள் சமூகப் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியவர்கள் என்பதால், அவர்களைப் பிற மாணவர்களுடன் ஒரே நிலையில் ஒப்பிட்டுத் தேர்வில் வகைப்படுத்துவது என்பது சம நீதிக்கு முரணானது என்பதால் மருத்துவப் படிப்புகளில் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.

இதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு அதன் பரிந்துரை அடிப்படையில் சிறப்புச் சட்டம் இயற்றி ஆளுநர் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் சில திருத்தங்கள் கோரி ஆளுநர் அதை திருப்பி அனுப்பினார்.

பின்னர் அந்தத் திருத்தங்களுடன் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி ஒரு சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, சட்ட மசோதா ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் இந்திய மருத்துவப் பட்டப் படிப்பு சேர்க்கையின்போது மாநில ஒதுக்கீட்டில் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கவும், மேற்படி இட ஒதுக்கீட்டு முறையினை நீட் தகுதியின் அடிப்படையில் உள்ள அனைத்துப் பிரிவுகளுக்கும் விரிவாக்கம் செய்யவும், மேலும், மேற்படி இட ஒதுக்கீட்டு முறையினை அனைத்து மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி உள்ளடக்கிய அனைத்து அரசுக் கல்லூரிகளுக்கும், சுயநிதிக் கல்லூரிகளுக்கும் அரசால் ஒதுக்கப்பட்ட அனைத்துப் பிரிவு இடங்களுக்கும் இச்சட்ட முன்வடிவில் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.

தமிழக அரசு நிறைவேற்றி உள்ள சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், நடப்பாண்டிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு ஒதுக்கீட்டில் சுமார் 300 இடங்கள் கிடைக்கும். நீட் தேர்வு முடிவுகள் அக்டோபர் 16-ம் தேதி வெளியிடப்பட்டு, மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்குக் கலந்தாய்வு நடத்த தமிழக அரசு காத்திருக்கிறது. இந்நிலையில் நீதிமன்றத்தில் இவ்வழக்கு வந்தபோது ஆளுநரை நிர்பந்திக்க, உத்தரவிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எனினும் ஆளுநர் அனுமதி குறித்து அரசுத் தரப்பு காத்திருந்தது. ஆளுநர் ஒப்புதல் அளிக்கவேண்டும் என அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். இந்நிலையில் கலந்தாய்வு தடைப்படுவதால் ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வலியுறுத்தும் விதமாக ஆளுநரைச் சந்திக்க தமிழக அரசின் சார்பில் 5 அமைச்சர்கள் ஆளுநரைச் சந்திக்க இன்று காலையில் ராஜ்பவனுக்குச் சென்றனர்.

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் தற்போது ஆளுநரைச் சந்தித்துப் பேசி வருகின்றனர்.

No comments:

Post a Comment