Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, October 29, 2020

மாணவர்களின் உளவியல் நிலை கல்வித்துறைக்கு வலியுறுத்தல்

மாணவர்களின் உளவியல் நிலையை அறிந்து கொள்வதற்கு, கல்வித்துறை ஏற்பாடு செய்ய வேண்டியது அவசியமாகியுள்ளது. மாணவர்கள், கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் வீடுகளில் முடங்கியுள்ளனர். மார்ச், ஏப்., மே மாதங்களில் பெற்றோரும் மாணவர்களுடன் இருந்த நிலையால், மனதளவில் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன.

ஜூன் மாதம் முதல், பாடங்களையும் படிக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும், சில வீடுகளில், பெற்றோர் இருவரும் பணிக்குச்செல்வதால் மாணவர்கள் மட்டுமே தனிமையில் இருக்கும் சூழலும் உள்ளது. இதனால், அவர்கள் உளவியல் ரீதியான அழுத்தத்திற்கு ஆளாகி வருகின்றனர். பல வீடுகளில், மாணவர்கள் அவ்வாறு பாதிக்கப்பட்டிருப்பதையே பெற்றோர் அறியாமல் உள்ளனர். சில பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே, அவர்களோடு நேரடியாக உரையாடி, எண்ண ஓட்டத்தை அறிந்து வழிநடத்தி வருகின்றனர்.மாநில அரசின் சார்பில், இலவசமாக உளவியல் ஆலோசனை பெறுவதற்கு, தொடர்பு எண்களும் வழங்கப்பட்டுள்ளன. 

இருப்பினும், இவ்வாறு அழைத்து ஆலோசனை பெறுவது கட்டாயமில்லாத நிலையால், அதன் முக்கியத்துவம் மாணவர்களுக்கு சென்றடையவில்லை. அவர்களின் மனநிலையை அறியாமல், தொடர்ந்து கல்வி சார்ந்த பயிற்சிகளை அளிப்பது மாணவர்கள் மனதளவில் பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது. 

கல்வித்துறை இதனை கருத்தில்கொண்டு, அவர்களின் மனநிலையை அறிந்து கொள்வதற்கான ஏற்பாட்டை செய்ய வேண்டும். ஆசிரியர்கள் அல்லது பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள உளவியல் ஆலோசகர்களைக்கொண்டு, மாணவர்களின் மனநிலையை அறிந்துகொள்வதற்கும், தெளிவு படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டியது தற்போது அவசியமாகியுள்ளது.

No comments:

Post a Comment