Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, December 25, 2020

தேசிய திறனாய்வு தேர்வு விதிமுறைகள்: ஆசிரியர்களுக்கு அறிவுரை

உடுமலை கல்வி மாவட்டத்தில், தேசிய திறனாய்வுத்தேர்வு நடத்தப்படுவதற்கான பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அரசுப்பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, உதவித்தொகை வழங்கும் வகையில், தேசிய திறனாய்வுத்தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டுக்கான தேர்வு, வரும் 27ம் தேதி நடக்கிறது.பள்ளிகள் செயல்படாத இந்த சூழலில், மாணவர்களுக்கு இத்தேர்வு மையங்களில் நடத்தப்படுகிறது. மாணவர்கள் பாதுகாப்பான முறையில் தேர்வு எழுதுவதற்கு, ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், தேர்வு மையங்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உடுமலை கல்வி மாவட்டத்தில், பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளி, மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி உட்பட ஐந்து மையங்களில், 397 மாணவர்கள் இத்தேர்வு எழுதுகின்றனர். 

தேர்வு மனத்திறன் மற்றும் கற்றல் திறன் என இரண்டு பிரிவுகளாக, காலை, 9:00 முதல் 11:00 வரை மற்றும் 11:30 முதல் 1:30 வரை என நடக்கிறது. இடைவெளி நேரத்தில், மாணவர்கள் சமூக இடைவெளி பின்பற்றி, தண்ணீர் அருந்தவும், கழிப்பறை செல்லவும் அனுமதிக்கப்படலாம். ஒரு தேர்வறையில், 10 மாணவர்கள், ஒரு மையத்துக்கு அதிகப்பட்சமாக, 130 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். 

தேர்வு மையங்களில் மாணவர்கள், கண்காணிப்பாளர்கள் உட்பட அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கண்காணிப்பாளர்கள் தெர்மல் ஸ்கேனர் பயன்படுத்தி, மாணவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதித்த பின்னர் தேர்வறைக்குள் அனுமதிக்கலாம். தேர்வு மையங்களில், கிருமி நாசினி தெளித்து தயாராக வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு, உடுமலை கல்வி மாவட்டத்தில், தேர்வு மைய தலைமையாசிரியர்களுக்கு, தேர்வுக்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment