Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, January 18, 2021

தமிழகத்தில் 19.01.2012 பள்ளிகள் திறப்பு: என்ன செய்யலாம், கூடாது?- முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

மிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 19.01.2012 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடைபெற உள்ளன. இதனையடுத்துத் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் தூய்மை மற்றும் ஆய்வுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

முன்னதாக, கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில், பள்ளிகளில் என்னென்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்று அரசு சார்பில் முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுபற்றித் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

'' சுகாதார விதிமுறைகள்

* ஆன்லைன்/ தொலைதூரக் கற்றல் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

* பள்ளிக்கு வராமல் ஆன்லைன் மூலம் படிக்க விரும்புவர்களுக்கும் உரிய அனுமதி வழங்கப்பட வேண்டும்.

* தனியார் பள்ளி நிர்வாகிகள் எழுத்துப்பூர்வ சம்மதத்தைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அளித்த பின்னரே தங்கள் பள்ளிகளைத் திறக்க முடியும்.

* பள்ளிகளைத் திறப்பதற்கு முன்பு 1% சோடியம் ஹைப்போகுளோரைட் கரைசல் தெளித்து பள்ளி வளாகம், பொருட்கள், கைப்பிடிகள், கதவுகள், ஜன்னல்கள் போன்றவற்றைக் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

* அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உள்ள அனைத்து வகுப்பறைகளிலும் சுகாதாரத் துறையால் வழங்கப்படும் சானிடைசர்களைப் பயன்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

* பள்ளிகளின் நுழைவுவாயில் மற்றும் வெளியேறும் இடங்களில் அல்லது தேவைப்படும் இடங்களில் ஆல்கஹால் கொண்ட கிருமி நாசினி, சோப்புகள் வைக்கப்பட்டு, கை கழுவும் வசதிகள் செய்யப்பட வேண்டும்.

* வெப்பப் பரிசோதனைக் கருவிகள், கிருமிநாசினிகள், சோப்புகள் போன்றவை பள்ளியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

* கழிப்பறைகள் முறையாகச் சுத்தம் செய்யப்பட்டு, தூய்மையாகப் பராமரிக்கப்பட வேண்டும்.

* பள்ளிகளில் மாநில உதவி எண்கள், உள்ளூர் சுகாதார அதிகாரிகளின் எண்களைக் காட்சிப்படுத்த வேண்டும்.

தனிமனித இடைவெளிக்கான விதிமுறைகள்

* அனைத்து வேலை நாட்களிலும் பள்ளி நுழைவு வாயிலிலும், வளாகத்திலும் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க, தனிமனித இடைவெளி, விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட வேண்டும்.

* மாணவர்கள் பள்ளிக்கு வெளியே சுற்றித் திரிய அனுமதிக்கக் கூடாது.

* நுழைவுவாயில் மற்றும் பள்ளிக்குள் குறைந்தபட்சம் 6 அடி இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.

* இறை வணக்கக் கூட்டம், விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

* நீச்சல் குளங்கள் (இருந்தால்) மூடப்பட வேண்டும். உடற்கல்வி மற்றும் விளையாட்டுகளுக்கான பாட வேளைகள் அனுமதிக்கப்படாது.

* நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் தேசிய மாணவர் படை நடவடிக்கைகளுக்கும் அனுமதியில்லை .

* வெவ்வேறு வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு வரும், வெளியேறும் நேரத்தைத் தனித்தனியாக நிர்ணயிக்கலாம். பள்ளிக்கு உள்ளே வருவதற்கும், வெளியே செல்லவும் வெவ்வேறு பாதைகளைப் பயன்படுத்த வேண்டும்.

* வரிசையாகச் செல்லும்போது தனிமனித இடைவெளியைப் பின்பற்றும் வகையில் தேவையான இடங்களில் வட்டம், கட்டம் போன்ற குறியீடுகளைத் தரையில் குறிக்க வேண்டும்.

* வகுப்பறையில் இருக்கைகளை ஏற்பாடு செய்யும்போது குறைந்தபட்சம் 6 அடி இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.

* ஆசிரியர் அறைகள், வரவேற்பறை உள்ளிட்ட அலுவலகப் பகுதிகள் மற்றும் பிற இடங்களில் முறையான தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

* வானிலை அனுமதித்தால் திறந்த, வெளி இடங்களில் ஆசிரியர்- மாணவர் கலந்துரையாடலை நடத்திக் கொள்ளலாம்.

* வகுப்பறைக் கதவுகளும் ஜன்னல்களும் எப்போதும் திறந்து வைக்கப்பட வேண்டும்.

* மாணவர்களுக்கு இடையே உணவு பகிர்தலை அனுமதிக்கக் கூடாது.

* கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வரக்கூடாது. கட்டுப்பாட்டு மண்டலங்களில் இருக்கும் பள்ளிகள் இயங்கவும் அனுமதியில்லை.

* மாணவர்களின் வருகையைக் கட்டாயப்படுத்தக் கூடாது. அது முழுவதும் பெற்றோரின் சம்மதத்தைச் சார்ந்து இருக்க வேண்டும்.

* முடிந்த அளவுக்கு ஏசி வசதியைப் பள்ளிகள் பயன்படுத்தாமல் தவிர்க்கலாம்.

* அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும், பணியாளர்களும் பள்ளி வளாகத்தில் உள்ளேயும், வெளியேயும் முகக்கவசங்களை அணிந்திருப்பதைத் தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

* மாணவர்கள் தங்களுக்குள் முகக் கவசங்களைப் பகிர்ந்துகொள்ளக் கூடாது.

* பள்ளி வளாகத்துக்குள் அனைத்துக் குப்பைகளும் குப்பைத் தொட்டியில் மட்டுமே போடப்பட வேண்டும்.

* குப்பைத் தொட்டியில் உள்ள குப்பைகள் அனைத்தும் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும்.

* போதிய இடைவெளியில் குறைந்தபட்சம் 40 விநாடிகளுக்கு மாணவர்களும் ஆசிரியர்களும் கைகழுவ வேண்டும்.

* மாணவர்களின் உடல் மற்றும் மன நலனைக் காக்க முழுநேர, பயிற்சி பெற்ற செவிலியர்/ மருத்துவர் மற்றும் ஆலோசகர் பள்ளியில் இருப்பதை உறுதி செய்யவேண்டும்.

* பள்ளிகளில் தேவைக்கேற்ப மருத்துவ உதவி வழங்க, நகரும் மருத்துவக் குழுக்களைச் சுகாதாரத் துறை தயாராக வைத்திருக்க வேண்டும்''.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment