Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, January 12, 2021

3 வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை - உச்சநீதிமன்றம்


மறு உத்தரவு வரும்வரை மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்காலத்தடை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தில்லியில் 48 ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டுமென அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், மத்திய அரசு இத்தனியா மறுத்து வருகிறது. மத்திய அரசுடன் விவசாயிகள் நடத்திய பேச்சுவார்த்தைகளில் இதுவரை உடன்பாடு எட்டப்படவில்லை. விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள், சமூக அமைப்புகள் பல ஆதரவு தெரிவித்து வருகின்றன.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினா் சாா்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. விவசாயிகளின் போராட்டம் தொடா்பாகவும் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் மீதான விசாரணை, தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்ரமணியன் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்றைய வழக்கின் விசாரணையில், மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த உத்தரவு தொடரும் என்றும் கூறியுள்ளது. மேலும், வேளாண் சட்டங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்வு காணவும், வேளாண் சட்டங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் ஒரு சிறப்பு குழுவினை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

குழுவில் இடம்பெற்றுள்ளோர்

பாரதிய கிசான் சங்கத் தலைவர் ஜிதேந்தர் சிங் மன், வேளாண் பொருளாதார வல்லுநர் அசோக் குலாட்டி, அனில் தன்வத், தெற்காசியாவின் சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் பிரமோத் கே. ஜோஷி ஆகியோர் பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment