Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, January 25, 2021

பள்ளிகள் திறந்த ஐந்து நாள்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று!

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு, வீட்டிலிருந்தே பாடம் பயிலும் வகையில் 'ஆன்லைன் வகுப்புகள்' முன்னெடுக்கப்பட்டது. மாணவர்களின் வாழ்வில் பெரிய தாக்கத்தை இந்த நோய் பரவும் காலம் ஏற்படுத்தியது. இதற்கிடையில் பொதுத்தேர்வு ரத்து, அனைவரும் தேர்ச்சி உள்ளிட்ட சில முக்கியமான முடிவுகளையும் தமிழக அரசு எடுத்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது 2020-21 கல்வியாண்டின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பொதுத்தேர்வு விரைவில் நடத்தப்படவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால், கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்ததாக இல்லை. அதற்கான முழுமையான தடுப்பூசியும் பயன்பாட்டிற்கு வராத நிலையில் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பு குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் கடந்த மாதம் நடத்தப்பட்டது. இதற்குப் பெற்றோர்களிடமிருந்து பள்ளிகள் திறப்பதற்கு ஆதரவு கிடைத்ததால், ஜனவரி 19-ம் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஐந்தே நாள்கள் ஆகியுள்ள நிலையில் ஆறு பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது கல்வித்துறை அதிகாரிகளிடையே கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் பள்ளிகள் செயல்பட்டபோதிலும், சேலத்தில் ஒரு மாணவி, ஒரு ஆசிரியர், சென்னையில் மூன்று ஆசிரியைகள், பழனியில் ஒரு ஆசிரியர் என ஆறு பேருக்கு கொரோனா பரவியிருப்பது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து வகுப்புக்கு 15 மாணவர்கள் வீதம், காலை மற்றும் மதியம் என இரண்டு நேரங்களாகப் பிரித்து சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவேண்டும் என்றும் மாணவர்கள் ஒருவருக்கொருவர் பள்ளிகளில் குறைந்தபட்சம் 6 அடி இடைவெளியை நிச்சயம் கடைப்பிடிக்கவேண்டும் என்றும் கல்வியாளர்கள் பரிந்துரைக்கின்றனர். 

மேலும், எதனால் தற்போது பள்ளிக்குச் சென்றவர்களுக்கு கொரோனா தோற்று ஏற்பட்டது என்பதற்கான காரணத்தை ஆராயவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர். மாணவர்களின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டும் அவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்கும் வகையிலும் முடிவெடுக்க வேண்டும் என்பதே கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

No comments:

Post a Comment